தீபாவளியும்! இலங்கையும்? (காணொளி)
தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்றன.
வரலாற்று சிறப்புமிக்க நல்லைக்கந்தன் ஆலயம், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகியவற்றில் தீபாவளி விசேட பூஜைகள் நடைபெற்றன.
தீபத்திருநாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருவதுடன், ஆலயங்கள் தோறும் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்த விசேட பூஜைகளில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின் போது ஆடைக் கொள்வனவு உள்ளிட்ட பல விடயங்களில் ஆர்வம் காட்டவில்லை.
அதேவேளை, மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.
ஹட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சுவாமி ஆலயத்தின் பிரதான குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இன்று காலை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.
இதன்போது ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் தலைமையிலான குருமார் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதில் களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலன சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததோடு, ஆலய பிரதம குரு மற்றும் பெரியோர்களால் கலந்து கொண்டு மக்களுக்கு தீபாவளி பண்டிகையின் சிறப்புக்கள் தொடர்பில் கருத்துக்களையும் தெரிவித்து, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இதேவேளை, கிழக்கு இலங்கையில் தொன்மை வாய்ந்ததும் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும், தீபாவளியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கணேச ரிவிசாந்த கணேச குருக்கள் தலைமையில் பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது.
தீபத் திருநாளை முன்னிட்டு ஆலயம் அலங்கரிக்கப்பட்டு அதன் பின்னர் விக்னேஸ்வரா பெருமானுக்குரிய பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. இதில் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து பெருமளவான பக்த அடியார்கள் கலந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டனர்.