பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் - மனுஷ நாணயக்கார!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை தொழில் அமைச்சு ஏற்றுக்கொள்வதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தொழில் அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்தத்தில் இணக்கப்பாடு எட்டப்படாமையை அடுத்து, வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கடந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் விலகியிருந்தது.
இந்தநிலையில், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அதனுடன் தொடர்புடைய சகல தரப்பினருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெருந்தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகளையும் அழைத்து, அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்காவிட்டால், மீண்டும் வேதன நிர்ணய சபையினை கூட்டி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கான சகல ஆலோசனைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமக்கு வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.