காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 30 பேரும் பிணையில் விடுவிப்பு!
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (01) மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
காத்தான்குடி - பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவித்துள்ள ஸஹரான் காசிமின் சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் நேற்று (01) அதிகாலையில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் 23 மோட்டர் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிஸார் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை அடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இவர்களை நேற்று மாலை மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.