கால்வாய்க்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் - இருவர் பலி!
கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதான வீதியில் கோவிந்தன் கடை சந்திப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

குறித்த வீதியிலுள்ள நீர்ப்பாசன கால்வாய்க்குள் இன்று காலை இரண்டு தலைக்கவசங்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பிரவேசித்த பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் முன்னிலையில் நீர்ப்பாசன கால்வாயிலிருந்து குறித்த இரண்டு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கிளிநொச்சி, இராமநாதபுரம் - அழகாபுரி பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் வீழ்ந்துள்ளதாகவும், அதன்போது ஏற்பட்ட காயங்களால் இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், சடலங்களை பார்வையிட்ட நீதவான் அவற்றை பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.