முன்னாள் ஆட்சியாளர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து மக்களை ஏமாற்றியே வந்தனர் - சஜித் பிரேமதாச
கடந்த காலங்களில் நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறி பலர் பெரிதாக பேசிக் கொண்டாலும், மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே அவர்கள் செய்து வந்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சுமத்தியுள்ளார்..
விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஸ்மார்ட் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
பால் பண்ணையாளரின் கால்நடை வளத்திற்கு தேவையான மேய்ச்சல் தரை இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இதற்கான மேய்ச்சல் தரை வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆங்கில மொழி அறிவை மேம்படுத்திக் கொள்ளுமாறு பிள்ளைகளைக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் எதிர்காலத்தை வலுப்படுத்த முடியும்.
ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் உள்ளடக்கிய வகையில் கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 286 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு மகிழவட்டுவன் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 04 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.