நெஞ்சுவலி.. சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! வெளியான பரபர தகவல்!

நெஞ்சுவலி.. சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! வெளியான பரபர தகவல்!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிணையில் வெளிவந்த பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். 

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில் சங்கர் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சவுக்கு சங்கர் விரைவில் சிறையில் இருந்து வெளி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது தேனி மாவட்ட காவல்துறை. இதை அடுத்து சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து திரும்பப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்தது. 

இதனை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

இதன் காரணமாக சிறையில் இருந்த சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார்.

 தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர், குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டதை அடுத்து செப்டம்பர் கடைசி வாரத்தில் விடுதலை ஆனார். அவரை அவரது வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

தொடர்ந்து பல்வேறு யூட்யூப் சேனல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேட்டி அளித்தும் வருகிறார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.