முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்த மாவீரரின் வரலாற்றுப் பதிவும் வீரவணக்கமும்
வீரவணக்க நிகழ்வு-2023
பிரித்தானியா.
2009 இறுதி கட்ட போரின் போது களமாடி வீரச்சாவினை தழுவிக் கொண்ட மாவீரர்களில், யுத்த நெருக்கடி காரணமாக அடையாளப்படுத்தப்படாமல் விடுபட்ட மாவீரர்களில், உறுதிப்படுத்தப்பட்ட 20 மாவீரர்களின் வீர வணக்க நிகழ்வு 22.10.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு, பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இவ்வாண்டு தமிழீழ மாவீரர் பணிமனையால் 20 மாவீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவ் மாவீரர்களின் விவரங்கள் வருமாறு.
01. மாவீரர்: எழிற்செல்வன் (பொன்னையா செயநாதான்) -வவுனியா மாவட்டம்.
02. மாவீரர்: இன்மதி (கனகரத்தினம் சனோஜா) முல்லைத்தீவு மாவட்டம்
03. மாவீரர்: கார்மேகம் ( மரியநாயகம் கெனடி) கிளிநொச்சி மாவட்டம்.
04. மாவீரர்: அன்புச்செல்வி (தங்கதுரை ஜீவலட்சுமி) முல்லைத்தீவு மாவட்டம்.
05. மாவீரர்: இசைக்காவலன் (காந்திராசா ஜெயசுதன்) முல்லைத்தீவு மாவட்டம்.
06. மாவீரர்: எழில்வாணி (மோசஸ் மேரிசிந்துஜா) முல்லைத்தீவு மாவட்டம்.
07. மாவீரர்: செல்லக்கிளி/கிளியரசன் ( கறுப்பையா சசிதரன்) முல்லைத்தீவு மாவட்டம்.
08. மாவீரர்: இசையமுதன் (அலைக்சாண்டர் சந்தியோகு) மன்னார் மாவட்டம்.
09. மாவீரர்: இளமாறன் (கனகலிங்கம் முகுந்தன்) கிளிநொச்சி மாவட்டம்.
10. மாவீரர்: அருளாளினி (பொன்னம்பலம் அருளாளினி) முல்லைத்தீவு மாவட்டம்.
11. மாவீரர்: சாள்ஸ் அன்ரனி (பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி) யாழ் மாவட்டம் .
12. மாவீரர் தங்கச்சுடர் (தனபாலசிங்கம் கேசவன்) கிளிநொச்சி மாவட்டம்.
13. மாவீரர்: புகழ்மணி (மதியாபரணம் வரோதயன் ) முல்லைத்தீவு மாவட்டம்.
14. மாவீரர்: தென்றல் (ஞானலிங்கராசா சுபாஸ்கரன்) முல்லைத்தீவு மாவட்டம்.
15. மாவீரர்: கிளியரசன் (வீரகத்தி தினேஸ்வரன்) முல்லைத்தீவு மாவட்டம்.
16. மாவீரர் கார்குயில்/ரமேஷ் (சத்தியமூர்த்தி செந்தில்நாதன்) முல்லத்தீவு மாவட்டம்.
17. மாவீரர்: கஜந்தன் (கணேசன் கஜந்தன்) கிளிநொச்சி மாவட்டம்.
18. மாவீரர்: கலையமுதன் (ஆறுமுகம் சாந்தகுமார்) கிளிநொச்சி மாவட்டம்.
19.மாவீரர்: குமரன் (பாலகுமாரன் ரஞ்சித்குமார்) யாழ் மாவட்டம்.
20. மாவீரர் கண்ணன் (நடராசா சித்திவிநாயகன்)
யாழ் மாவட்டம்.
இவ் மாவீரர்களின் திருவுருவப்படம் தாங்கிய நிகழ்வு பண்ணிசை அணிவகுப்புடன் ஆரம்பமானது. மாவீரர்களது திருவுருவப்படம் தாங்கிய அணிவகுப்பு பொதுத்தூபியை வந்தடைந்தது. மாவீரர் நினைவுப் பொதுத் தூபியில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. பொதுச்சுடர்களை
திருமதி.பூங்குயில், திரு.பரணீதரன், செல்வி.சஞ்சீகா, திரு.குணா, திரு.உதயன்
ஆகியோர் ஏற்றி வைக்க, பிரித்தானியாவின் தேசிய கொடியினை திரு.பாலகிருஸ்ணன் மாஸ்டர் ஏற்றினார்.
தொடர்ந்து ஆயிரமாயிரம் மாவீரர்களில் குருதியில் சிவந்த நாளை மலரவிருக்கும் சுதந்திர தமிழீழத்தில் பட்டொளி வீசி பறக்கவிருக்கும் தமிழீழ தேசியக் கொடியினை கொடிப்பாடல் முழங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஜெயார்த்தன் அவர்கள் ஏற்றினார்.
பொது மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகை சுடரினை
திரு.அப்பன்
அவர்கள் ஏற்ற அகவணக்கம் நடைபெற்றது.
தொடர்ந்து மாவீர்களுடைய திருவுருவப்படங்கள், மாவீரர் மண்டபத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாங்கிகளில் வரிசைப்படுத்தப்பட்டது. நிகழ்வின் ஒழுங்கின்படி ஒவ்வொரு மாவீரர்களுடைய வீர வரலாறுகள் வாசித்து மதிப்பளிக்க, அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு உரித்துடையோர் ஈகை சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்தனர்.
அவ்வாறே முழுமையாக 20 மாவீரர்களுடைய வீர வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் எமது மாவீரர் தெய்வங்களுக்கு ஈகை சுடரேற்றி மலர் வணக்கம் செய்தனர். அவ்வேளை "சூரிய தேவனின் வேர்களை" எனும் பாடல் ஒலிக்கபட்டது.
நிகழ்வின் தலைமை உரையில் தலைமை உரையினை திரு.சங்கீதன் அவர்கள் வழங்கினார் அவ்வுரையில்,
இந்த நிகழ்வு ஐந்தாவது முறையாக நடாத்தப்படுகிறது.தமிழீழ மாவீரர் பணிமனையின் மரபுகளுக்கு அமைவாக இந்நிகழ்வு இடம்பெறுகிறது.
மாவீரருக்கான படைத்துறை நிலை (rank), அந்த மாவீரரின் துறைசார் உயர்நிலைப் பொறுப்பாளர்களின் பரிந்துரைக்கமைய, தேசியத் தலைவரின் ஒப்புதலுடன் தலைமைச் செயலகமூடாக வழங்கப்படுவதே நடைமுறையாகும். அவ்வாறான நடைமுறை தற்போது சாத்தியம் இல்லை என்பது நாம் அனைவரும் உணரக்கூடியதே.
இறுதிச் சமர்வரை விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிய ஒவ்வரு மாவீரரது அர்ப்பணிப்பையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிக்க வேண்டியது தமிழினத்தின் தவிர்க்க முடியாததொரு வரலாற்றுப் பணியாகும்.
குறிப்பாக போராளிகளாக செயற்பட்ட அனைவருக்கும் இது ஒரு தார்மிகக்கடமையாகும். இந்த வகையில் போராளிகளிடமிருந்து நாங்கள் மேலும் வினைத்திறனான, மேம்பட்ட ஒத்துழைப்புக்களை வேண்டிநிற்கிறோம்.
அண்மையில் மாவீரர்களின் விபரங்களை திரட்டும்பணியில் நாம் தாயொருவரை தொடர்புகொண்டோம். அந்த தாயின் கணவர் ஒரு மாவீரர். பின்னாளில் மகனும் விடுதலைப் போரில் இணைந்துகொண்டார்.
மகனின் வீரச்சாவு உறுதிப்படுத்தல் தொடர்பாக நாம் அவருடன் பேசியபோது அந்த தாயின் உணர்வு வெளிப்பாடு கீழ்வருமாறு இருந்தது.
எனது கணவர் ஒரு மாவீரர் போராட்ட வரலாற்றில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. எனது மகனும் தந்தையின் வழியே தாய்மண்ணுக்காக போராடக் சென்றார். அவரும் இந்த மண்ணுக்காக மடிந்தார். அவரின் அந்த அர்ப்பணிப்புப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ என்ற ஏக்கம், கவலை எனக்குள் எப்போதும் இருந்தது.
ஆனால் இன்று அவரின் பெயர் இந்த வரலாற்றில் பதியப்படுகிறது என அறியும் போது அது எமக்கு பெருத்த ஆறுதலாக உள்ளது. இதைத்தான் நாங்கள் இத்தனை காலமும் எதிர்பார்த்திருந்தோம்.'' என்கிறார் அவர்.
இந்த நிலையில்தான் மாவீரர்களின் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், இணையர்கள், குழந்தைகள் மற்றும் உரித்துடையோர்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவர்களின் இந்த எதிர்ப்பார்ப்பை எமது எண்ணத்தில் இருத்தி பணியாற்ற நாம் அனைவரும் உறுதி பூணவேண்டும்.
தேசத்தின் விடுதலைக்காக போராடி தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் ஒப்பற்ற தியாக வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கு கையளித்து அதனைப் பேணிப் பாதுகாக்கும் இந்த வரலாற்றுக் கடமையில் இணைந்து கொள்ள எமது இளைய தலைமுறையையும் நாம் அன்புரிமையுடன் அழைத்துநிற்கிறோம்.
என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து இவ்வாண்டு மாவீரர்கள் நினைவாக மாவீரர் நினைவு பாடல் வெளியிடப்பட்டது.
இவ் வீரவணக்க பாடல்
"வீரத்தின் வித்துக்கள் பாகம்-2" காவிய நாயகர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இப் பாடலிற்கான வரிகளை திரு. வரன் அவர்கள் எழுத, திரு.ஜவறி அகஸ்ரின் அவர்களின் இசையில்
பாடகர்கள் திரு. V.S. ஜெகன், மற்றும் இசைப்பறவை திருமதி.கரோலின் ஆகியோர் பாடியிருந்தனர்.
தொடர்ந்து பண்ணிசை அணி வகுப்புடன் மாவீரர் திருவுருவப்படங்கள் துயிலும் இல்லம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே வரிசைப்படுத்தப்பட்டிருந்த நினைவுக் கற்களில் அவர்களின் திருவுருவப்படம் வைத்து இறுதி நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் உரித்துடையோரிடம் திருவுருவப்படங்களும், தியாகத்தின் மேன்மை தாங்கிய தேசிய கொடிகளும் கையளிக்கப்பட்டது.
மிகவும் கனத்த இதயங்களுடன் தாயக நினைவுகளை சுமந்து உறுதி ஏற்புடன் இவ்வாண்டுக்கான வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.