மலையகம் “நாம் 200” நிகழ்வில்  பங்கேற்க நிர்மலா சீதாராமன் இலங்கை வருகை! 

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு 3 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ளார்.

நாம் 200 நிகழ்வில் பங்கேற்க இலங்கை வந்தடைந்துள்ள அவரை  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்,  ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மேலும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வானூர்தி ஊடாக கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். 

அதேவேளை, அஸ்கிரிய மகாநாயக்கர்களையும் அவர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இன்று மாலை திருகோணமலைக்கு சென்றுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று விஜயம் செய்துள்ளார்.

திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதா ராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க, ஆளுநர் செயலாளர் L.P மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக  செயலாளர் L.L அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் ஆகியோர் வரவேற்றனர்.

அத்துடன், ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதா ராமன் நாளை திருக்கோணேச்சரம்  ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.