இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் : இலங்கை பெண் ஒருவரை காணவில்லை!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளநிலையில் அங்குள்ள இலங்கை பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன  மோதல் : இலங்கை பெண் ஒருவரை காணவில்லை!

இலங்கை தூதரகத்தின் தகவல்களுக்கு அமைய, இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து அங்குள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படுமாயின் 071 66 40 560 என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் வட்ஸ்எப் இலக்கத்துக்கு தகவல் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் அறிய விரும்புபவர்கள் 1989 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை, இஸ்ரேலில் இலங்கையர்கள் உள்ள பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

 இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதப்படையினருக்கு இடையிலான மோதலை அடுத்து அங்குள்ள தங்களது நாட்டு பிரஜைகளை வெளியேற்றும் பணிகளை உலக நாடுகள் ஆரம்பித்துள்ளன.