திரு கனகரத்தினம் திருச்செல்வம் நாட்டுப்பற்றாளர் ஆக மதிப்பளிக்கப்பட்டார்
“சுயநலன் கருதாது, நேர்மையுடனும்,நெஞ்சுறுதியுடனும் எமது சுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பணியாற்றிய உயர்ந்த கலைஞரை நாம் இன்று மாரடைபால் இழந்துவிட்டோம். தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் சாதனைகளைப் புரிந்த இந்த கலைமாமணியை இழந்து ஒரு மாதத்தை கடந்து விட்டது.
திரு.கனகரத்தினம் திருச்செல்வம் அவர்கள் ஒரு தலைசிறந்த தமிழீழ திரைப்படக் கலைஞர். சிறந்த புகைப்பட கலைஞர்.நடிப்பு துறையில் மிகுந்த பற்றுக்கொண்டவர்.தனது நடிப்பாற்றலை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்தவர். இவர் நடித்த ‘சின்னவிழிகள்’திரைப்படம் மிக முக்கியதுவம் வாய்ந்தது.எமது விடுதலை இயக்கத்தின் கலை பண்பாட்டுக் கழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய மகத்தான மனிதர். இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் ,வற்றாத கலையுணர்வு ,கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு ,தமிழ் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் ,தமிழ் மண்ணின் விடுதலைக்கு பங்காற்றவேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ,சுயமான ஆளுமை ஆகிய அனைத்தும் இருந்தன. இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது. இந்த அழகான மனித மாண்பு அனைவரையும் அவரை நோக்கிக் கவர்ந்து கொண்டது. சிங்கள அரசின் அடக்குமுறைக்குள் நின்று தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டதை எதற்கும் அஞ்சாது ஆதரித்து துணிந்து செயற்பட்டு வந்தவர். அவரது விடுதலைப் போராட்டப்பாதையில் ஏற்பட்ட துன்ப, துயரங்களை எல்லாம் சவாலாக ஏற்று சாவின் இறுதிக் கணம் வரை உறுதியாக நின்றவர். தமிழீழ மண்ணின் பெருமையையும்,தமிழ் மக்களின் வாழ்வியலையும், துன்ப துயரங்களையும்,மாவீரர்களின் தியாகங்களையும் நடிப்புக்களால் வெளிப்படுத்தி வந்தவர். ஈழத்தமிழர்களுக்கு இவரது இழப்பு பெரும் துயர நிகழ்வு. 2009 ஆயுதப் போராட்ட மௌனிப்பை தொடர்ந்து சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக சாவின் இறுதிக்கணம் வரை போராடி வந்தவர்.
திரு.கனகரத்தினம் திருச்செல்வம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘நாட்டுப்பற்றாளர்’ என்ற தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.