திருவேந்தன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் போராளி   திருவேந்தன் ( குணசிங்கம் மோகனராஜன் முள்ளியவளை)  அவர்களின் வீரவணக்க நிகழ்வு கடந்த 28 .02. 2023 செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் வில்தனுஸ் எனுமிடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பெருமளவான போராளிகள் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு அவரது துணைவியாரதும் பிள்ளைகளினதும் துயரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் முன்னதாக சமய கிரியைகள் நடைபெற்று முடிய வீரவணக்க நிகழ்வுகள் திருமதி சுபா குருபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி திருமதி சுபா திலீபன் அவர்கள் ஏற்றி வைத்தார். திருவேந்தன் அவர்களது திருவுருவப் படத்துக்கு அவரது மைத்துனரும் பாடகருமான திரு ஜெயன் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து அனைவரும் எழுந்து நிற்க தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனையினரால் திருவேந்தன் அவர்களின் வித்துடலுக்கு தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவேந்தன் அவர்களின் துணைவியாரும் பிள்ளைகளும் வித்துடலுக்கு மலர்மாலை அணிவித்தனர் . தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தின் பின்னர்  தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனையினரால் வெளியிடப்பட்ட வீரவணக்க அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து  அனைவரும் திருவேந்தன் அவர்களின் வித்துடலுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள். சமநேரத்தில் வீரவணக்க உரையினை போராளி பொன். நாயகன் ஆற்றினார். அதில் அவர் இரண்டாயிரத்து ஒன்பது மே பதினேழு வரை தாயகத்தில் இறுதிக் களமாடிய அனைவரும் மதிப்பளிக்கப்படவேண்டியதன் தேவையையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியது தமிழீழ மக்களின் வரலாற்று கடமை என்பதனை வலியுறுத்தியிருந்தார்.தொடர்ந்து திருவேந்தன் அவர்களின் போராட்ட வாழ்வு தொடர்பான வரலாற்றுத் தொகுப்பினை அவரது போராளி நண்பர் திரு செவ்வேள் வழங்கியிருந்தார். தொடர்ந்து அவரது இளமைக்கால பாடசாலை வாழ்க்கை விடயங்களை அவரது பள்ளித் தோழர்கள் சார்பில் திரு தசி பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் திரு கோணேஸ்வரன்  அவர்களும் திருவேந்தன் அவர்களின் மைத்துனர் திரு. பேரம்பலம் ஜெயதரன் அவர்களும்  யாழ்வேள் விளையாட்டுக்கழகம் சார்பில் அதன் உறுப்பினர் ஒருவரும் பிராங்கோ தமிழ்ச் சங்கம் டொர்சி சார்பில் திருமதி தனேஸ்வரி ஆசிரியை அவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த மகளிர் போராளி திருமதி தீபா தர்சன் அவர்களும் தமிழீழ அரசியல் துறை சார்பில் திரு. தமிழரசன் அவர்களும் நண்பர் கவிஞர் திரு. குரூஸ் அவர்களும் மொன்றோயல் பனியோலே தமிழர் புனர்வாழ்வு கழக கிளை சார்பில் விக்டர் அவர்களின் நினைவுக்கவிதையும் வழங்கப்பட்டிருந்தன. இறுதியாக திருவேந்தன் அவர்களின் வித்துடலின் மீது போர்த்தப்பட்ட தமிழீழத் தேசியக் கொடியும் அவரது திருவுருவப்படமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை சார்பில் திரு பொன் நாயகன் அவர்களால் திருவேந்தன் அவர்களின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினரது சார்பில் திரு ஜெயன் நன்றியுரை வழங்கியிருந்தார். மிகவும் கனத்த மனதுடனும் தமது மகத்துவம் வாய்ந்த மண்ணின் மைந்தனுடைய நினைவுகளுடனும் அன்றைய நாள் சிறப்புற்றிருந்தது. 

மாவீரர் பணிமனை வெளியிட்டிருந்த அறிக்கை

28.02.2023                                                                 

தமிழீழம்

தாய் நாட்டின் விடுதலைக்காக அரும்பணியாற்றிய எமது விடுதலை இயக்கத்தின் இலட்சியப் போராளி ஒருவரை இன்று நாம் இழந்துவிட்டோம். 2009 இறுதிப் போர் வரை உறுதியாக நின்று தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடிய இலட்சிய வீரனை எதிர்பாராமல் இழந்து நாம்சோகக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றோம். 

திரு.திருவேந்தன் அவர்கள் 1995ம் ஆண்டு எமது விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஒரு சிறந்த போர்வீரனாக, விளையாட்டு வீரனாக,நிர்வாகியாக,அறிக்கையாளராக,கள ஆய்வாளராக,விசாரணையாளராக,ஆசிரியராக பல பணிகளை முன்நின்று செயற்படுத்தியவர்.

2009க்கு பின் பல உயிராபத்துக்களை கடந்து  புலம்பெயர்ந்து பிரான்சு நாட்டை வந்தடைந்த பின்பும் ஒரு விளையாட்டு வீரனாக,தேசப்பற்றாளராக தன்னால் முடிந்த பங்களிப்பை  தாய் மண்ணின் விடுதலைக்காக ஆற்றி வந்தவர்.
திரு.திருவேந்தன் அவர்கள் ஒரு பண்பான போராளி,நெஞ்சில் தூய்மையும்,நேர்மையும் கொண்டவர்.தன்நலமற்றவர்,
இனிமையான பேச்சும்,அமைதியான போக்கும்,எளிமையான பண்பும்,அழகான சிரிப்புமே அவரது ஆளுமையின் அழகு.

சிங்கள அதிகார வர்க்கம் தனது இராணுவ அடக்குமுறைப் பாதையைக் கைவிட்டு தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை நன்குணர்ந்தவர்.
தமிழீழப் போராட்டப் பயணத்தில் மறைமுகமாக அன்னார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. ஆபத்தான போராட்டப்பாதையைச் சரியாக புரிந்து கொண்டு பயணித்து வந்தவர்.


  திரு.திருவேந்தன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து  எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு  எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன்னத இலட்சியத்திற்காக உயிர் துறக்கத் துணிந்த போராளிகளை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் விடுதலை வரலாற்றில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்