மாதாந்த மாவீரர் வணக்க நிகழ்வு பிரித்தானியா மாசி 2023

மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு.

பிரித்தானியா.

மாசி மாதம் 2023

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் 

போது இதே மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் ஈகைப்பேரொளி முருகதாஸ், 

வான் கரும்புலிகள் கேணல் ரூபன், லெப் கேணல் சிரித்திரன்,

மற்றும் லெப்.கேணல் தவா உட்பட இதே காலப்பகுதியில் சாவடைந்த

மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், மேலும் அப்பாவித்தனமாக இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் ஆகியோரையும் நினைவு கொள்ளும் நினைவு வணக்க நிகழ்வு வழமை போல் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்

3.00 மணிக்கு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பொதுச் சுடர் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடரினை திருமதி.சுகன்யா, திரு.கரன், செல்வன்.மதி, செல்வி.அபிநயா, செல்வன்.பிரனுஜன் ஆகியோர் ஏற்றினர்.

தமிழீழ தேசியக் கொடியினை செல்வி.அருவி அவர்கள் ஏற்றி வைக்க, அக வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

பொது மாவீரருக்கான ஈகைச்சுடர்னை திரு.புண்ணியலிங்கம் (ரூபன்) அவர்கள் ஏற்றி வைக்க, மலர் மாலையினை செல்வி.புகழினி அவர்கள் அணிவித்தார்.

 எமது தேசியத் தலைவரின் தாயாராகிய பேரன்னை பார்வதி அம்மா அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு திரு.பாஸ்கரன் அவர்கள் ஈகைச்சுடர் எற்ற, திருமதி.நவமணி அம்மா அவர்கள் மலர் வணக்கம் செய்தார்.

தொடர்ந்து ஈகை பேரொளி.முருகதாஸ் அவர்களுடைய திருவுருவப் படத்திற்கு அவருடைய தாயார் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கத்தினை செய்தார். அன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மாவீரர்களின் உரித்துடையோர், அவர்களின் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர் வணக்கம் செய்தனர். தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் அங்கிருந்த மாவீரர்களின் திரு உருவப்படங்களுக்கு ஈகை ஏற்றி மலர் வணக்கம் செய்தனர். மாவீரர் நினைவு பாடல்கள் பாடப்பட்டது.

மாவீரர்களின் நினைவுபகர்வுகளும் இடம்பெற்றது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டு திருமலை கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினை தழுவி கொண்ட மேஜர்.கமல் மேஜர்.மதி உட்பட 22 மாவீரர்கள் நினைவுகள் பகிரப்பட்டது. மேலும் வான் கரும்புலிகளான கேணல்.ரூபன், லெப்.கேணல்.சிரித்திரன் ஆகியோருடைய நினைவுகளும், லெப்.கேணல்.தவா,

லெப்.கேணல்.தியாகராஜன், லெப்.கேணல்.இசைஞானி, லெப்.கேணல்.கோமகன் உட்பட பல மாவீரர்களின் நினைவுகளும் வரலாற்று விடயங்களும் பகிரப்பட்டது.

குறிப்பாக இயக்கத்தின் பணி நிமித்தம் கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த லெப்.கேணல்.கோமகன் அவர்கள் இறுதிநேர யுத்த காலத்தில் தாயகம் திரும்பி, களமாடி வீரச்சாவினை தழுவி கொண்ட வீர வரலாறு பதிவு செய்யப்பட்டது.

இறுதியில் உறுதி ஏற்புடன் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" எனும் பாடல் ஒலிக்க தமிழீழ தேசியக்கொடி கையேற்புடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

 மேலும் வளாகத்தில் அமைந்துள்ள அற்புத விநாயகர் ஆலயத்தில் மாவீரர்களுக்கான வழிபாடும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.