தென்னிலங்கை துப்பாக்கிச் சூடு - அரசியல் தலைவர் உட்பட 5 பேர் பலி

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
Update >>>
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்தை வெளியேறும் பகுதியில் டிஃபெண்டர்ரக வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இருந்து டிஃபெண்டர் வாகனத்தில் பயணித்த ஐவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெலியத்தை வெளியேறும் பகுதியின் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறிய குறித்த டிஃபெண்டர் வாகனம், வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த போது, பிக்அப் ரக வாகனம் ஒன்றில் பிரவேசித்த நபர் ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.
அபே ஜனபல சக்தி அல்லது எமது மக்கள் சக்தியின் தலைவர் சமன் பெரேராவும் சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்சியிலேயே இலங்கையின் பௌத்த பிக்குகளான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் கலகொடஅத்தே ஞானசார ஆகியோரும் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.