புதிய சபாநாயகர் தெரிவு இன்று!
நாடாளுமன்றம் இன்று (16) கூடவுள்ளது.
அதன்படி, இந்த வாரத்தில் நாடாளுமன்றம் கூடி இன்று மற்றும் நாளை (17) இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
அதன் பின்னர் வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 9.30 முதல் 10.30 வரையான நேரமானது வாய்வழி பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு முன்னதாகவே ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் புதிய சபாநாயகர் தெரிவு, அமர்வின் ஆரம்பத்தின் போதே இடம்பெறவுள்ளதால் அதற்கு சிறிது நேரம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகராக செயற்பட்ட, அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து, 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது.
சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 3 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பிரதி சபாநாயகரின் பெயரும் அதில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் புதிய சபாநாயகர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதேவேளை, சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிவது பொருத்தமானதல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.