மரக்கறி விலைகளில் குறைவு இல்லை - விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம்!

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதி வரை, அதிகரித்துள்ள மரக்கறி விலைகளில் தெளிவான குறைவை எதிர்பார்க்க முடியாது என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மரக்கறி விலைகளில் குறைவு இல்லை - விவசாய ஆராய்ச்சி  மற்றும்  பயிற்சி நிறுவகம்!

நாட்டின் ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களிலும் மரக்கறி விலை வேகமாக அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். 

 ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, பேலியகொட மெனிங் சந்தையில் இன்று ஒரு கிலோ கரட் மற்றும் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 500 முதல் 550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

 அத்துடன், ஒரு கிலோ பச்சை மிளகாய் 900 முதல் 1,100 ரூபாய் வரையிலான விலையில் பதிவாகியுள்ளது. 

 இதேவேளை, பேலியகொடை மெனிங் சந்தை வரலாற்றில் மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகளில் அதிகூடிய விலைகள் இன்று பதிவாகியுள்ளதாக மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. 

 பண்டிகை காலங்களில் கேள்வி அதிகரிப்பு மற்றும் மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததால் நிரம்பல் குறைந்துள்ளமையினால் மரக்கறி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 550 முதல் 650 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

 அத்துடன், ஒரு கிலோ போஞ்சி விலை 400 முதல் 480 ரூபா வரையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை 850 முதல் 1,000 ரூபா வரையிலும் பதிவாகியுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 560 முதல் 600 ரூபா வரை காணப்பட்டது. 

 அத்துடன் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 660 மற்றும் 680 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் தாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பல பிரதேசங்களில் உள்ள நுகர்வோர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை தொடருமானால் மரக்கறி விநியோகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் மேலதிக பணிப்பாளர் சமந்த பள்ளியகுருகே தெரிவித்துள்ளார்.