மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி - அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம்!
இலங்கையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று (05) மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 1 கிலோகிராம் கரட்டின் விலை 690 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோன்று 1 கிலோகிராம் வெண்டைக்காய் 490 ரூபாயாகவும், கோவாவின் விலை 390 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் 1 கிலோகிராம் போஞ்சி 600 ரூபாயாகவும், 1 கிலோகிராம் லீக்ஸ் 490 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அத்தியாவசிய பொருட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன.
விற்பனையாளர்கள் பொருட்களில் அதிக இலாபம் ஈட்டுவதை தடுத்து, நுகர்வோருக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி உருளைக்கிழங்கு, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 870 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 265 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி பெரிய வெங்காயம் 320 ரூபாயாகவும் அதிகபட்ச மொத்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் பருப்பு 295 ரூபாயாக அதிகபட்ச மொத்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.