வடக்கில் தேசியத் தலைவரின் 69 வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொகுப்பு! (காணொளி)

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று (26) இடம்பெற்றது.

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கேக் வெட்டி, வல்வெட்டித்துறை பாரம்பரிய உணவு வகைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, வவுனியாவில் மாவீரர் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு போராளிகள் நலன்புரிச்சங்கத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தோணிக்கல் வைரவர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சங்க அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மாவீரர்களுக்கான ஒரு நிமிட அகவணக்கத்துடன், உயிர் நீர்த்த மாவீரர்களுக்காக ஈகை சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

அத்துடன் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான இன்று மாவீரர் குடும்பத்தினரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, வட்டுக்கோட்டையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் கட்சியின் அலுவலகத்தில், வட்டுக்கோட்டை தொகுதிக் கிளைச் செயலாளர் பற்றிக் தனுஷ் தலைமையில் உணர்வுபூர்வமாக நேற்று (26) முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது தாயக விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிராக்கிய மாவீரர் பெற்றோர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக மாவீரர்களின் நினைவாக மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி மதிப்பளிக்கபட்டதோடு தொடர்ச்சியாக முன்னாள் போராளி செழியனால் மாவீரர்களின் நினைவுரை முன்னெடுக்கப்பட்டது.

இறுதியாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிய போசனமும் பரிமாறப்பட்டது.

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள், உரித்துடையோர் , இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் போராளி செழியன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை மகளிர் அணி செயற்பாட்டாளர்கள், இளைஞர் அணியினர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.