என்னிடமிருந்து பறிப்பவற்றை எண்ணி புலம்ப மாட்டேன் – மகிந்த ராஜபக்ச!

என்னிடமிருந்து பறிப்பவற்றை எண்ணி புலம்ப மாட்டேன் – மகிந்த ராஜபக்ச!

அரசாங்கம் தன்னிடமிருந்து பறிப்பவற்றைப் பற்றி எண்ணி புலம்புபவன் தான் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் விட்டுச் செல்லத் தயாராக இருப்பதாகவும், ஒரு கணம் கூட அங்கு தங்கத் தயாராக இல்லை என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு எழுத்துப்பூர்வமாக இன்னும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், அறிவிப்பு கிடைத்தவுடன் காலி செய்வதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியாக அரசாங்கத்திடமிருந்து பெற்ற அனைத்தையும் அரசாங்கம் மீளப் பெற்றாலும், மகிந்த ராஜபக்ச புலம்புபவன் அல்ல என்று அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வாடகை தொடர்பில் அண்மைய நாட்களில் எழுந்த விமர்சனங்கள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் அரச தலைவருக்கு பொருத்தமான வீடு , வாடகை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என்றும், அதன்படி, அவர் இந்த அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கிறார் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

இது தொடர்பாக ஜனாதிபதி எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியும் என்றாலும், இது அவரது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்று அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான ஜனாதிபதியின் பகிரங்க அறிக்கையைத் தொடர்ந்து பல விமர்சனங்கள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.