சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ வேண்டும் -  கூட்டு அறிக்கையில் வலியுறுத்தல்!

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட ஹர்த்தால் மற்றும் பேரணி என்பன முடிவுக்கு வந்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில், சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக மனிதப் புதைகுழிகளே தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக உள்ளது.

செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை இந்த விவகாரம் நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் கொக்குதொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் போர் உச்சமாக நடைபெற்றுகொண்டிருந்தது.

எனவே போர்க்காலப் பகுதியில் தான் இந்த புதைகுழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை நீண்டு செல்கின்றது.