ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொரளை பொலிஸாரால் கைது
EPF/ETF திருட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொரளை பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.
தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட மேலும் சில காரணங்களை முன்வைத்து முன்னிலை சோசலிச கட்சியின் தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் அவர் கைதானார்.
போராட்டத்தின் காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்த அவரை முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே இழுத்துச் சென்று, பின்னர் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
பொரளை – சஹஸ்புர பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவருக்கு சுகாதார அமைச்சு மற்றும் அதனை அண்மித்துள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை முன்னெடுப்பதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் நேற்று தடைவிதித்திருந்தது.
எனினும், தடைவிதிக்கப்படாத வனாத்துமுல்ல பகுதிக்கு அவர்கள் பேரணியாக சென்றனர்.