மாவீரர் தினம் குறித்த ஜனாதிபதியின் அறிக்கை போலியானது?
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தங்களின் உறவுகளை அமைதியாக நினைவு கூறுவதற்கு நியாயமான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது என அரசாங்க தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு போரின் உயிரிழந்த மாவீரர்களுக்கு நவம்பர் மாதத்தில் பொது இடங்களில் நினைவேந்தல்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போலியான முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பம் இடப்பட்ட அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
இவ்வாறான அறிக்கை ஒன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியாகவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த ஆண்டு தொடக்கம் அவ்வாறு எந்தவித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிக்கை தொடர்பாக அரசாங்க தரப்பு எந்தவித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.
குறித்த இவ் அறிக்கை போலியானது என்று மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஊடகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.இந்த போலி அறிக்கை தொடர்பில் தேசிய ஊடகங்கள் எவையும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.