பாடசாலை நட்பு மீண்டும் இயக்க நட்பாகி…

பாடசாலை நட்பு மீண்டும் இயக்க நட்பாகி…
School friendship turned into running friendship again...

பாடசாலை நட்பு மீண்டும் இயக்க நட்பாகி…

1987 இல் இந்திய இராணுவத்தாலும்,
ஒட்டுக்குழுவாலும் எமது குடும்பம் இலக்குவைக்கப்பட்டபோது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்வொன்றிற்குள் தள்ளப்பட்டோம்.
வலிகாமத்திலிருந்து வடமராட்சிக்கு வந்து சேர்ந்தபோது கூடவே கல்வியும் தடைப்பட்டிருந்தது.

தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் தரம் 
ஆறில் கல்வியைத் தொடர்ந்தபோது நண்பனானவன் ஜெயசீலன்.
தூரத்து குடும்ப உறவாக இருந்தபோதும் பாடசாலைதான் எமது நட்பின் உருவாக்கத்திற்கு காரணமாய் அமைந்தது.

நான் இயக்கத்தில் இணைந்தபின் 
பல வருடங்கள் அவனைச் சந்திக்கவில்லை.விடுமுறையில் வீடுசென்று அவனது வீட்டிற்கு சென்றபோதுதான் தெரியும் அவனும் இயக்கத்தில் இணைந்துவிட்டான் என்பது. தாக்குதல் நடவடிக்கைகளின்போது சந்திக்கும் படையணிப் போராளிகளிடம் விசாரித்து தேடிப்பார்த்தேன். 
ஆனாலும் அவன் பணியாற்றிய துறை அல்லது படையணி எதுவென என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. சந்திக்கும் வாய்ப்புகளும் எனக்கு கிடைக்கவில்லை.

1999 ஆனையிறவு பெருந்தள அழிப்புத் தாக்குதலுக்காக எமது படகுத்தொகுதிகள் தயாரானபோது பூநகரி கடற்கரையின் வெளியில் விமான எதிர்ப்பு ஏவுகணையுடன் (missile) எமது படகுகளுக்கான பாதுகாப்புக்காக மூவர் கொண்ட விமான எதிர்ப்பு அணியொன்று விடப்பட்டிருந்தது.

அதன் முன்னணி வீரனாக அங்கு வந்திருந்தான் ஜெயசீலன்.
அது எனக்கு உடன் தெரிந்திருக்கவில்லை.
நானும் இப்படகுத்தொகுதியில் நிற்பதுபற்றி அவனும் அறிந்திருக்கவில்லை.
ஒரு வாரம் உருண்டோடிவிட்டிருந்தது.

ஓர் இராப்பொழுது கடும்பசி வயிற்றை பின்னியெடுத்தபோது. படகில் இருவரை விட்டுவிட்டு நானும் இன்னொரு போராளியும் கரைக்குச்சென்று,
சாப்பிடுவதற்கு ஏதும் கிடைக்குமா என கேட்டுக்கொண்டு 
விமான எதிர்ப்பு அணிப் போராளிகளின் கூடாரத்திற்குச் சென்றோம். அவர்களும் தம்மிடமிருந்த மீதி உணவை தந்துவிட்டு தேனீர் தயாரிப்பதற்கு ஆயத்தமாகினர்.

அப்போதுதான் (ஜெயசீலன்) சுவர்ணனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 
அந்த இருளில் பரவிய மெல்லிய நிலவு வெளிச்சத்தில்   அவனுடைய முகத்தை என்னால் அடையாளம் காண முடியாமலிருந்தது. 
தேநீரைக்குடித்துவிட்டு தெரியாமலேயே விடைபெற்றோம். 

கரையிலிருந்து படகிற்கு செல்வதென்றால் இடுப்பளவு நீரில் நடந்து குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும்.அப்படிச்சென்று படகில் ஏறி அதே உடையுடன் விடிய விடிய காவலில் கிடப்போம். 
கடற்படையின் நீருந்துவிசைப்படகுகள் கிளாலியிலிருந்து வெளிவந்தால் அவற்றைக் குறிவைத்து எமது படகுகள் சீறிப்பாயும்.
ஆனையிறவுச் சமரின்போது சிலமாதம் ஸ்ரெல்த் படகில் (AGL) Automatic grenade launcher,
எனப்படும் ஓட்டோ டொங்கானுடன்தான் 
எனது சமர்கள நாட்கள் கழிந்தது.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் ஓரிருவாரம் கடந்து கரைக்குச்சென்றபோது,
எமக்கு வந்த உலர் உணவில் ஒரு சிறுபொதியை விமான எதிர்ப்பு அணியினருக்கும் கொடுக்கலாம் எனும் உணர்வோடு அவர்களின் கூடாரத்திற்குச் சென்றிருந்தோம்.
அது ஒரு மாலைப்பொழுது கூடாரத்திலிருந்து போராளிகள் வெளிவந்து எம்மை அழைத்தனர்.

உள்ளே சுவர்ணன் ஏவுகணைக்கு எண்ணெய் தடவிச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தான்.
எம்மைக் கண்டதும் வாங்கோ இருங்கோ என அழைத்தவன்,
அப்போதுதான் நிமிர்ந்து என்னைப்பார்த்தான். டேய் மச்சான் ...என எழுந்தவன் 
என்னை ஞாபகமிருக்கா...எனக் கேட்டபோது நான் அதிர்ந்துதான் போனேன்.
குத்துவரிச்சீருடையில் ஜெயசீலன் சுவர்ணனாக மாறி நெடுத்து,
வளர்ந்து,நிமிர்ந்து நின்றிருந்தான்.
பாடசாலை நட்பு மீண்டும் இயக்கத்தில் கைகோர்க்கத் தொடங்கியது.

ஏழு ஆண்டுகளின் பின்னர் அவனைச் சந்தித்தபோது தொலைந்துபோன ஏதோவொரு பொக்கிசம் மீளக்கிடைத்ததான உணர்வு மேலிட்டது. அன்றிரவு தாக்குதலுக்காக எமது படகுகளை தயார்நிலையில் நிறுத்திவிட்டு கரைக்குவந்து தூக்கம் தொலைய நீண்டநேரம் உரையாடிக்கொண்டே இருந்தோம். கதைத்து ,காத்திருந்து உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம்.

நான் இயக்கத்திற்கு வந்ததற்கு காரணம் இருக்கு அது உனக்கும் தெரியும் ஆனால் நீ இயக்கத்திற்கு வந்தது ஏன் என்று எனக்கு தெரியேல ஏன்டா வந்தாய்... என்றபோது அவன் கூறியது....நீயும் போனாப்பிறகு பலபெடியள் வெளிக்கிட்டிற்றாங்கள்.அவங்கள் வீரச்சாவடைந்து சிலரின்ர வித்துடலும் ஊரில் ஊர்வலத்தோட கொண்டுவந்து பார்வைக்கு வச்சவங்கள்.அதெல்லாம் பார்த்தாப்பிறகு நான் மட்டும் படிச்சு பட்டம்பெற்று சுயநலமானதொரு வாழ்க்கைக்குள் போவதற்கு விரும்பவில்லை.அதுதான் வந்திட்டன்....என்று இழுத்தான்.

அவனது தந்தை சவுதி அரேபிய நாடொன்றிலும் அவனது தாயும் தங்கையும் பருத்தித்துறையிலும் இருப்பதாக கூறியவன் யாழ்ப்பாணச் சண்டை வெற்றியுடன் முடிந்தால் வீட்டிற்குச் சென்று அனைவரயும் பார்க்கலாமெனும் தனது விருப்பத்தையும் தெரிவித்திருந்தான்.
அவன் வீட்டுக்கு ஒரேயொரு ஆண் பிள்ளை என்பதால் தாயின் அன்பான அரவணைப்பில் கட்டுண்டு கிடந்தவன். எப்போதும் அவனை விட்டுவிலகாத அவனது தங்கை.நடுத்தர வசதியான வீட்டுவாழ்க்கை.இப்படியிருக்க 
எப்படி இயக்கத்திற்கு வந்தான் என்பது எனக்கு பெரும் அதிர்ச்சியையே கொடுத்திருந்தது.

நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். விட்டுப்பிரிய மனம் மறுத்தபோது தலைவரின் அந்த உன்னத அறிவுறுத்தலே ஞாபகத்துக்கு வந்தது.

‘தோழமைக்கு உரிமைகொடு
கடமை நேர்த்தில் தவிர்த்துக்கொள்’

போராளிகளின்  ஆழமான நட்பை உணர்ந்த தலைவர் அதற்காகவே இந்த  வார்த்தையை போராளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ஓரிரு வாரமே 
போராட்ட வாழ்க்கையிலும் அந்த நட்பு நீடிக்கும் என நாம் எதிர்பார்த்த ஒன்றுதான் ஆனாலும் அடிக்கடி வோக்கியிலும்,நேரடியாகவும் எமது சந்திப்புகள் தொடர்ந்திருந்தபோதும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் அவனுக்கான முக்கிய பணியொன்று வழங்கப்பட்டிருந்தது.

இராணுவ கட்டுப்பாட்டு பகுதியான சாவகச்சேரிப் பகுதிக்குள் சென்று,அங்கே தாழப்பறந்து எமது முன்னரங்க நிலைகள் மீது திடீர் ரொக்கட் தாக்குதலை மேற்கொள்ளும்
Mi 24 தாக்குதல் உலங்குவானூர்தியை தாக்கி வீழ்த்துவதற்கான பெரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சுவர்ணனின் மூவர் குழு புறப்படத் தயாராகியது.
பத்திரமாக மூவர் கொண்ட அவனது அணியைத் தரையிறக்குவதற்காக எமது படகுகளைத் தயாராக்கி கச்சாய்ப் பகுதியில் தரையிறக்கிவிட்டுத் திரும்பினோம்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவன், தலைமையின் கட்டளைப்படி 
Mi 24 தாக்குதல் உலங்குவானூர்தியை வெற்றிகரமாக சுட்டுவீழ்த்திவிட்டான்.
இராணுவம் திகைத்தது.புலிகள் எப்படி தமது உலங்குவானூர்தியை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்து சுட்டுவீழ்த்தினார்கள் என படைத்தரப்பு குழப்பிப்போயிருந்தது.
சுவர்ணனின் அணி மீண்டும் எமது பகுதிநோக்கி நடக்கத்தொடங்கியது.

இடையிடையே இராணுவக் காவலரண்களைக் கடந்து கச்சாய் நீரேரிக்கரைக்கு வந்துகொண்டிருந்தவர்களை இராணுவம் சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கியது. சுவர்ணனும் அந்த முற்றுகைக்குள் அகப்பட்டுக்கொண்டான். ஆனாலும் அந்த முற்றுகையை ஊடறுத்து அவன் இடைவிடாது களமாடி மீண்டும் எம்மைச் சந்தித்தான். கரை மீண்டவன் தேசியத் தலைவரைச் சந்தித்தபோது சிறப்புப் பரிசாக பிஸ்டல் ஒன்றை பெற்றிருந்தான்.

ஆனையிறவு படைத்தளத்தை வெற்றிகொண்டு படையணிகள் தளம் திரும்பியபோது எமது படகுத்தொகுதிகளும் தளம் திரும்பியது. இப்போது சுவர்ணனின் நேரடித்தொடர்புகள் அறுந்து தொலைத்தொடர்பில் மட்டுமே உரையாடிக்கொள்வோம்.

எம்மால் கைப்பற்றப்பட்ட கட்டைக்காடு இராணுவத்தளத்திற்கு எமது படகுத்தொகுதி நகர்த்தப்பட்டு கடற்புலிகளின் புதிய சண்டைத்தொகுதிக்கான தளம் போடப்பட்டது. இரவுபகலாக போராளிகளின் கடின உழைப்பால் படகுகள் இறக்குவதற்கான ஓடுபாதைகளும், படகுகளுக்கான பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்படும் பணியில் மூழ்கியிருந்ததால் சுவர்ணனுடனான தொலைத்தொடர்பு உரையாடல்களும் அறுபட்டுப்போனது.

புதிய போர் வியூகங்களுடன்,
தொழில்நுட்பரீதியான பல புதிய மாற்றங்களோடு வடிவமைக்கப்பட்ட சண்டைப்படகளில் கடும்பயிற்சிகள் தொடர்ந்தது. உயரக்கடலில் கடற்சமர்கள் உக்கிரம்பெற்றபோது 
எமது நட்பு மீண்டும் முற்றாகவே அறுபட்டுப்போனது.

ஒருசில மாதங்கள் உருண்டோடிய பின்னர் சுவர்ணனின் வீரமரணச் செய்தியே எனக்கு வந்துசேர்ந்தது.

இரகசிய நடவடிக்கை ஒன்றிற்காக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றிருந்தவன் எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்டு இறுதிவரை போராடி 
அந்த மண்ணிலே மடிந்து மேஜர் சுவர்ணனாக சரித்திரமாகிவிட்டான் என்பதை மனம் ஏற்க மறுத்தது.

அவன் வித்துடல்கூட எமக்கு கிடைக்கவில்லை அவன் குடும்பமும் அவனின் வித்துடலைக்கூட பார்க்கவில்லை.அவனின் சாதனைகள் எதுவும் அவர்கள் அறியவில்லை.
இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்திருந்த அவர்கள் தங்கள் மகன் மாவீரனாகிவிட்ட செய்திகூடத் தெரியாமல் அவனை நினைத்து கலங்கியபடி என்றோ ஒருநாள் தங்கள் பிள்ளை வீட்டுக்கு வரும் என நம்பியிருந்தனர்.
வெளித்தெரியாவண்ணம் உள்ளுக்குள் அழுதுகொண்டேயிருந்தனர். 

சமாதான உடன்படிக்கையின் பின்னரே எமது இயக்கம் உத்தியோகபூர்வமாக நேரடியாகச் சென்று அவனது சிரித்த முகத்துடனான வீரவணக்கப்படம் ஒன்றையும் அவன் போட்டிருந்த (Shirt) மேலாடை ஒன்றையும் கொடுத்து அவனது வீரச்சாவை அறிவித்திருந்தது.

சாமாதான காலப்பகுதியில்  சூசையண்ணையிடம் அனுமதிபெற்று நானும் லெப் கேணல் சோபிதனும் சுவர்ணனின் வீட்டிற்கு சென்றிருந்தோம். சுவர்ணன்பற்றி அவர்களுக்குச் சொல்ல என்னிடம்  அவனது சாதனைப்பட்டியல்கள் மட்டுமே இப்போது மீதமாய் கிடந்தது.
என்னை அடையாளப்படுத்தியபோது அவர்கள் மௌன அழுகை பெருக்கெடுக்கத் தொடங்கியது.
பிள்ளையைப் பார்த்து ஏழு வருசம் தம்பி.....ஒருமுறை இந்த அம்மாவைப் பார்க்க வரமாட்டானோ எண்டு வயித்தில நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் பார்த்திருந்தன்...
நான் கும்பிட்ட தெய்வம்கூட என்ர ஒரேயொரு ஆம்பிளைப் பிள்ளையை என்னட்ட இருந்து பறிச்சு எடுத்துப்போட்டுது....

அவர்கள் தங்கள் ஒரேயொரு மகனை இழந்து தவிக்கும் தவிப்பிற்கு எம்மால் ஆறுதல் வார்த்தைகள் எதுவும் கூறுவதற்கு இயலாமலே போனது.

தொண்டைக்குழிக்குள் ஏதோவொன்று உருண்டுகொண்டேயிருந்தது.
என்ர பிள்ளையை கடைசியாக ஒருமுறைகூட பார்க்க குடுத்துவைக்காத பாவியாகிப் போனேனே ஐயோ.....என்று அவனின் அம்மா படத்தை அணைத்துக்கொண்டு அழுதார்.

சுவர்ணன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, சுவர்ணன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை.

தமிழினம் உள்ளவரை சுவர்ணனும் எம் நினைவுகளில் அழியாது வாழ்வான்.

தோழமையின் அன்புடன்.
புலவர்.