மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாசின் சட்டத்துக்கு முரணான கைதினை வன்மையாகக் கண்டிப்பதோடு,அவரை உடனே விடுதலை செய்யவும் வலியுறுத்துகிறோம்

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாசின் சட்டத்துக்கு முரணான கைதினை வன்மையாகக் கண்டிப்பதோடு,அவரை உடனே விடுதலை செய்யவும் வலியுறுத்துகிறோம்

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாசின் சட்டத்துக்கு முரணான கைதினை வன்மையாகக் கண்டிப்பதோடு,அவரை உடனே விடுதலை செய்யவும் வலியுறுத்துகிறோம்!

மனித உரிமைச் செயற்பாட்டாளரும் உலகத் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கடந்த 16.01.2025 அன்று  சுவிற்சர்லாந்து நாட்டில் சட்டத்துக்கு முரணான வகையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 15 மற்றும் 16 திகதிகளில் யெனீவாவில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது மாநாட்டின் இரண்டாம் நாளான யனவரி 16 அன்று மதியம் 13:30 இற்கு மாநாட்டு மண்டபத்தில் வைத்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் காவல்துறையினரின் சட்டத்துக்கு முரணான இந்தக் கைதினை உலகத் தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் அவர்களின் சட்டத்துக்கு முரணான கைதும் தடுத்து வைப்பும் அவரின் செயற்பாடுகளை முற்றுமுழுதாக முடக்குவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும்,ஆர்வலர்களும் நோக்குகின்றனர். ஐ.நா, ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளிட்ட பன்னாட்டு இராசதந்திர தளங்களில்  தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான செயற்பாடுகளை மாத்திரமல்லாது எம்மைப் போன்று விடுதலைக்காக போராடும் இனங்களின் நீதிக்கும்,உரிமைக்காகவும் 
கடந்த 27 வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு காத்திரமான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் பொஸ்கோ மரியதாஸ் அவர்களை பலவழிகளிலும் முடக்குவதற்கு வல்லாதிக்க சக்திகளும் பேரினவாத சிறீலங்கா அரசும் தொடர்ச்சியாக பயங்கர பிரயத்தனத்தினை முன்னெடுத்துவந்திருந்த சூழலில் அவரின் கைது இடம்பெற்றுள்ளது.

பொஸ்கோ மரியதாசின் கைதின் பின்னணியில் வல்லாதிக்க சக்திகள் மற்றும் பேரினவாத சிறீலங்கா அரசு மாத்திரமன்றி அவர்களின் அடிவருடிகளின் காட்டிக்கொடுப்புகளும் சூழ்ச்சிகளும் காரணம் என்பதையும் நாம் இந்த இடத்தில் உலகத் தமிழர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
மேலும் பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் உலகத் தமிழர்களையும் எம்மைப் போன்று பாதிக்கப்பட்ட பல்வேறு இனங்களையும் ஒருங்கிணைத்து ஐ.நா உள்ளிட்ட  பன்னாட்டு இராசதந்திரத் தளங்களில் செயற்படுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர் முன்னெடுத்த செயற்பாடானது வல்லாதிக்க சக்திகளுக்கும் உரிமைக்காக போராடும் தேசங்களை ஆக்கிரமித்துள்ள நாடுகளுக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்துவந்துள்ளது. இதனால் பல வழிகளிலும் சூழ்ச்சி செய்து பல்வேறு தடைகளையும் விசாரணைகளுக்கும் உற்படுத்தி கடந்த 2020 ஆண்டில் இருந்து அவர் யெனிவாவில் அமைந்திருக்கும் ஐ. நா கட்டடத்திற்குள் செல்வதற்கான தடையை ஏற்படுத்தினர். எனினும் அவரின் செயற்பாடுகளை அவர்களினால் நிறுத்த முடியவில்லை அதனாலேயே அவரின் இந்தக் கைது தற்போது இடம்பெற்றுள்ளது.

அத்துடன் பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முதல்நாள் அவர் கலந்துகொண்டிருந்த குறித்த மாநாட்டில் சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழர் விரோதச் செயற்பாட்டினை  வன்மையாக கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்காக உள்நுழைவு ( விசா ) அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்களுக்கு உள்நுழைவு அனுமதியினை கூடுதலாக மறுத்துவரும் சிறீலங்காவில் அமைந்துள்ள சுவிஸ் தூதுவராலயம் சிங்களவர்களுக்கு குறிப்பாக முன்னாள் சிறீலங்கா இராணுவத்தினருக்கு உள்நுழைவு அனுமதியினை தொடர்ந்து வழங்கிவருகிறது. இது குறித்து பல்வேறு ஐ.நா அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் கேள்விகளை எழுப்பிய போதும் சுவிஸ் அரசானது உப்புச்சப்பற்ற பதில்களையே வழங்கியது.

மேலும் கடந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டிற்கு சிறீலங்காவில் இயங்கும் சுவிஸ் தூதுவராலயத்தின் ஒருங்கிணைப்பிலேயே மூன்று தமிழர்களும் மூன்று சிங்களர்களும் பங்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதில் அவர்கள் தெரிவித்த கருத்துகள் உலகத் தமிழர்கள் மத்தியில் விசனத்தையும் பலத்த விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இதே சுவிஸ் அரசுதான் இமாலயப் பிரகடனம் என்று சொல்லப்பட்ட நாசகார செயல்பாட்டிற்கான பொருளாதார பங்களிப்பினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான் சூழலில்  தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் அவர்களின் சட்டத்துக்கு முரணான கைதினையும் வலுக்கட்டாய தடுத்து வைப்பையும் உலகத் தமிழர் இயக்கம் நோக்குகின்றது. அத்துடன் இது பாரிய மனித உரிமை மீறல் எனவும் தெரியப்படுத்துகிறோம். இவ்வாறான எதேச்சதிகார செயற்பாட்டிற்கு எதிராக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த செயற்பட முன்வரவேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

உலகத் தமிழர் இயக்கம்

#freebosco #followers #highlights