இலங்கையில் போர் படுகொலையை அடுத்து பொருளாதார படுகொலை நடத்தப்படுவதாக ஸ்ரீ நேசன் குற்றச்சாட்டு!
இலங்கையில் போர்ப் படுகொலை, இனப்படுகொலை நடைபெற்றன என்பதைத் தமிழர்கள் உட்பட நேர்மையான பிற இன மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குற்றம்சுமத்தியுள்ளார்.
ஆனால், பேரினவாதிகள் இதனை ஏற்க மாட்டார்கள். அவர்களுடன் பிழைப்புக்காக இயங்கும் தமிழ் பண, பதவி வெறியர்கள், ஒட்டுக்குழுக்கள் இதனை உள்ளூர அறிந்தாலும், வடிகட்டிய சுயநலத்தால் அந்த உண்மையைக் கூற மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார். அதேவேளை, உயர் நீதிமன்றத்தால் பொருளாதாரக் குற்றவாளிகள் யார் என்பதை அடையாளப்படுத்த ப்பட்டுள்ளார்கள்.
இதனை நாட்டிலுள்ள சகல இன மத மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றோம். செய்வதும் கடினமாகவே இருக்கும். கடந்த தேர்தலில் பாரிய குற்றவாளிகள் கூட தேர்தல் தில்லுமுல்லுகளால் வெற்றி பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் வென்றதால், பொருளாதாரத்தில் மோசடிகள், ஊழல்கள் அதிகரித்தே உள்ளன.
இவர்கள் தமது வீட்டுப் பொருளாதாரங்களை சட்டவிரோதமாக அதிகரித்துள்ளனர். அதேவேளை நாட்டுப் பொருளாதாரத்தை பூச்சியத்தை நோக்கித் தள்ளியுள்ளனர். இந்த நிலையில் போர்க்குற்றத்தை பேரினவாத வெற்றியின் ஒரு பக்கமாக சிங்கள மக்கள் பார்த்தாலும், பொருளாதாரக் குற்றத்தை மன்னிப்பதற்கு வாய்ப்பு இல்லை.
இதனையும் கடப்பதற்காக மொட்டுக் கட்சியின் இனவாத முரண்பாடுகளை அதிகரிப்பதற்குப் பாரிய சதிகளைச் செய்வதற்கு முயற்சிப்பார்கள்.
மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் அதில் ஒருவராக இருக்கலாம். இவர் பல இனவாத செயற்பாடுகளை தமிழர்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றார்.
பொலிசார் தமிழர்களை அடக்குவதில் காட்டும் தீவிரம், தேரர் விடயத்தில் இல்லை. ஆட்சி அதிகாரக் கதிரைக்காக மொட்டுக் கட்சியும் கையாட்களும் எதுவும் செய்வர். ஆனால் எதிர்காலத்தில் பொருளாதாரக் குற்றத்தைக் கடந்து வெல்வதற்கு வாய்ப்பளிக்காது.
வறுமைக்குள் தள்ளப்பட்ட இலங்கை மக்கள் அக்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளிடம் இருந்து சட்ட ரீதியாக நஷ்டங்களைக் கோரவும் வாய்ப்பு உள்ளது.பொருளாதாரக் குற்றவாளிகளை சட்டரீதியாகவும்,வாக்களிப்பு மூலமாகவும் தண்டிக்க இடமுள்ளது என்றார்.