சீனாவில் பரவும் வைரஸால் இலங்கைக்கு ஆபத்தா?
சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human Metapneumonia) அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் பொதுவானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட HMPV வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்றும் பொதுவாக சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதாகவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.
இருப்பினும், HMPV வைரஸ் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு தீவிரமாக இருக்கலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வைரஸ் நிலை பொதுவாக ஒரு வாரத்திற்குள் குறையும் என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், “இது தொடர்பான பிரச்சனையான சூழ்நிலை இலங்கையில் பதிவாகவில்லை என ” இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
“இந்த நிலைமை உலக சுகாதார அமைப்பு (WHO)எதிர்பாராதது என்று கூறியுள்ளது.
தற்போதைய சுவாச நோய்களின் அலை முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருப்பதாகவும், வைத்தியசாலைகள் நோயாளிகள் திறம்பட நிர்வகிக்கப்படுவதாகவும் சீன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்” எனவும் கூறியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் அவதானம் செலுத்தி வருவதாகவும் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார நிலைமைகளை தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பதற்கான காரணம் முன்னர் கண்டறியப்பட்ட வைரஸ் என்றும், புதிய அல்லது அசாதாரண வைரஸ்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை பொதுவான சுவாச நோய்கள் பரவுவதைப் போன்றது என்றும், மேலும் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.