மன்னர் சார்ல்ஸுடன் கனேடிய பிரதமர் இன்று சந்திப்பு!

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று (03) பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்தித்து “கனடா மற்றும் கனேடியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்” பற்றி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக இணைக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் குறித்து கனடாவின் அரச தலைவர் சார்லஸ் மன்னர் ஏன் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ,
கனடா மற்றும் கனேடியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப் பற்றி இந்த சந்திப்பின் போது விவாதிப்போம், நாளை (திங்கள்) அவரது மாட்சிமையுடன் அமர்வதை நான் எதிர்நோக்குகிறேன்.
மேலும், கனேடியர்களுக்கு நமது இறையாண்மை மற்றும் ஒரு தேசமாக நமது சுதந்திரத்திற்காக நிற்பதை விட வேறு எதுவும் முக்கியமானதாகத் தெரியவில்லை – என்றார்.
கடந்த வாரம் சார்லஸ், பிரிட்டனுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது அரசுப் பயணத்தை மேற்கொள்ளுமாறு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தார்.
ஓவல் அலுவலகத்தில் உலக ஊடகங்கள் முன்பு நடந்த சந்திப்பின் போது பிரித்தினாயி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அழைப்பிதழை வழங்கினார்.
அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறுவதற்கு கனடா ஒப்புக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று ட்ரம்ப் பலமுறை பரிந்துரைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.