பாகிஸ்தானில் 22 பேர் மர்மமான முறையில் மரணம் - உச்சக்கட்ட கண்காணிப்பில் கராச்சி!

பாகிஸ்தானில் 22 பேர் மர்மமான முறையில் மரணம் - உச்சக்கட்ட கண்காணிப்பில் கராச்சி!

பாகிஸ்தானின், கராச்சி நகரின் பல்வேறு இடங்களிலும் அடையாளம் தெரியாத பலரின் சடலங்கள் காணப்பட்ட நிலையில், அவ்வாறு பலியானோர் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்திருப்பதால், அங்கு உச்சக்கட்ட கண்காணிப்புப் பணிகள் நடந்த வருகிறது.

பாகிஸ்தானில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இவ்வாறு சாலைகளில் சடலங்கள் கண்டெடுக்கப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை மட்டும் பல்வேறு இடங்களில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இவ்வாறு மர்ம மரணங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அங்குள்ள இலாபநோக்கற்ற அமைப்புகள் கூறுகையில், கடைசியாக பலியான மூன்று பேரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று தெரிய வந்திருப்பதாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், இதுவரை ஒருவரின் உடலும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தன்னார்வல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செவ்வாயன்று கராச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐந்து பேரின் உடல்களை கண்டுபிடித்தனர். இதன் மூலம், இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இவர்களது உறவினர்கள் என்று யாரும் வரவில்லை என்றும், அடையாளம் காணக் கூட யாரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு சில நாள்களாக கராச்சியில் கடும் வெப்ப அலை வீசுவதால் பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தான் கராச்சி நகரில் ஆங்காங்கே இறந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. எனினும், இறந்தவர்களில் பலரும் போதைக்கு அடிமையானவர்களாக இருப்பதும், அவர்கள் குடித்துவிட்டு வெளியே விழுந்து கிடக்கும்போது அதிகப்படியான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.