சீசெல்ஸில் மின்பிறப்பாக்கி வெடிப்பு மற்றும் கனமழை - எழுவர் உயிரிழப்பு! (படங்கள் & குரல்பதிவு)

சீசெல்ஸ் தீவுகளில் பிரதான தீவான மாஹேவில் உள்ள கைத்தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சீசெல்ஸில் மின்பிறப்பாக்கி வெடிப்பு மற்றும் கனமழை - எழுவர் உயிரிழப்பு! (படங்கள் & குரல்பதிவு)
: :

இந்த வெடிப்பு காரணமாக வணிக கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதுடன், அருகிலுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் பாலன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சீசெல்ஸ் நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், அவர்கள் மாற்று இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், அத்தியாவசியத் தொழிலாளர்களைத் தவிர மற்ற அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு சீசெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் பலர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை கட்டுமான நிறுவனத்தில் இருந்த மின்பிறப்பாக்கி ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக கட்டிடத்தின் அருகில் நான்கு கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த CCCL வெடிபொருட்களும் வெடித்துச் சிதறியுள்ளன.

சர்வதேச விமான நிலையம் சம்பவ இடத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் இருந்தாலும் அங்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலைகள் மூடப்பட்டதுடன், அவசரகால நிகழ்வுகளைத் தவிர மற்ற அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, பாதுகாப்பு நிமித்தமாக மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளன.

சீசெல்ஸ் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயற்படுவதுடன், தீவுகளுக்கு இடையேயான படகு சேவைகள் பார்வையாளர்களுக்காக இயக்கப்படுகின்றன.

மாஹே தீவில் உள்ள தனது குடிமக்கள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு இங்கிலாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, ஒரே இரவில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 

இதன்போது வீடுகள் இடிந்தமையால் மூன்று பேர் உயிரிழந்தனர். 

வெள்ளம் காரணமாக கழிவுநீர் கடலில் கலப்பதால் மக்கள் கடலில் நீராட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ராம்கலவன், இந்த இரட்டை பேரழிவுகளை நாட்டிற்கு 'பேரழிவு' என்று வர்ணித்துள்ளார்.

அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்கள், தமது ஒத்துழைப்பை காட்டவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.