கந்தஹார் விமான கடத்தல் - மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும்  மாற்றம்?

கந்தஹார் விமான கடத்தல் - மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும்  மாற்றம்?

25 ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் தினத்தின் இரவு நேரத்தில், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்ல இருந்த இந்திய விமானம் ஒன்று கடத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் பின்னரான பாதிப்பு கெடுபிடிகள் இன்று வரை காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளன. 

இன்றும், நீங்கள் காத்மாண்டுவிலிருந்து இந்திய விமானத்தில் பயணிக்கும் போது, ஒரு கூடுதல் பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது.

விமான நிலையத்தில் வழக்கமான கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை முடித்த பிறகு விமானத்தினுள் நுழையும்  படிக்கட்டுகளுக்கு அருகில், தரையில் இருந்து சுமார் இரண்டரை அடி உயரத்தில் உள்ள அறையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் ஒரு மேலதிக சோதனைக்கும் பயணிகள் உட்பட வேண்டும்.

ஆனால் இந்தச் சோதனை இப்போது தேவையில்லை என்கிறார் நேபாள அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர்,    

"முந்தைய காலங்களில் இந்திய விமான நிறுவனங்கள் நேபாளின் பாதுகாப்பை நம்பவில்லை என்ற காரணத்தினால், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இப்போது இது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளோம்," என நேபாளின் தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் தெரிவித்தார்.

அந்த பழைய சம்பவத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, அந்த பயங்கரமான விமானக் கடத்தல் நிகழ்வின் நினைவு நிரந்தரமாக இருக்கும்.

காத்மண்டுவிலிருந்து இந்திய விமானங்களில் இந்தியா செல்லும் பயணிகளுக்காக, இந்தியா மேற்கொள்ளும் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளால், இரண்டு அண்டை நாடுகளின் உறவுகளில் அந்த கடத்தல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் மறையாமல் உள்ளதாக நேபாள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது இரு நாடுகள் இடையிலான நம்பிக்கை குறைவு என கருதக்கூடாது. மாறாக இது அந்நாடுகளின் உறவில் ஒரு தனித்துவமான அடையாளமாகக் கருதப்பட வேண்டும் என இந்திய ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.


8 நாட்கள் நீடித்த கடத்தல்

1999-ஆம் ஆண்டின் டிசம்பர் 24-ஆம் திகதி  மதியம், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் இந்தியாவின் IC 814 விமானம், சுமார் 180 பயணிகளுடன், காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை விட்டு புறப்பட்ட போது கடத்தப்பட்டது.

"எங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டவுடன், திடீரென ஒரு மோதல் ஏற்பட்டது, உடனடியாக அனைவரும் கீழே படுத்துகொள்ளும்படி கூறப்பட்டது. 

உணவுப் பொட்டலங்களைத் திறக்கக் கூட முடியவில்லை. என்னுடைய மனதில் முதலில் வந்த விஷயம், நகைகளைச் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துகொண்டு இருப்பார்கள் என்பதுதான். 

ஏனெனில் புதிதாகத் திருமணம் ஆன பல ஜோடிகள் விமானத்தில் இருப்பதை நான் கவனித்தேன்," என்று விமானத்தில் இருந்த நேபாள பயணி சஞ்சயா திடல், அச்சம்பவத்தை நினைவு கூறுகிறார்.

அவருக்கும் அப்போது புதிதாகத் திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ரோஜினா பதாகுடன், திருமணமான ஒரு மாதத்திற்கு பிறகு சஞ்சயா திடல் பயணம் செய்துகொண்டிருந்தார். 

அவர்கள் டெல்லி வழியாக பாகிஸ்தானில் உள்ள சஞ்சயாவின் பணியிடத்துக்குப் புறப்பட்டனர்.

"பிறகு, கடத்தல்காரர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தது. 

அவர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு எளிதில் நிறைவேற்றாது என்று உணர்ந்ததும், எங்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார்.

கடத்தல் சம்பவத்தின் ஏழாவது நாளில் தன்னுடைய அமைதியை இழந்ததாக அவர் நினைவுகூருகிறார். 

"கடத்தல்காரர்கள், திடீரென பயணிகள் மீது துப்பாக்கிகளை குறிவைத்து, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகக் கூறினர்," என அவர் கூறினார்.

எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு சூழல் மாறியது. ஒரு வாரம், கந்தஹாரில் தங்கியிருந்த அவர்கள் டிசம்பர் 31 அன்று டெல்லி திரும்பினர்.