நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்!

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணித்த பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது கப்பலில் 17 ஊழியர்கள் உள்பட 95 பேர் பயணம் செய்துள்ள நிலையில் பயணிகள் கூச்சலிட்டதால் கப்பல் பாதியிலேயே நாகை துறைமுகத்திற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1ஆம் திகதி முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது.
வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமான நிலையில் கப்பல் கடலில் தத்தளிக்க ஆரம்பித்ததால் பயணிகள் கூச்சளிட்டுள்ளனர். வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலின் கெப்டன் திருப்பியுள்ளார். இதை தொடர்ந்து நேற்றும்(02) இன்றும்(03) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.