மோடிக்கு சுமந்திரன் நன்றி தெரிவிப்பு!

“இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயம் இந்தியப் பிரதமரோடு சேர்ந்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக மூன்று விடயங்களை வலியுறுத்தியிருக்கின்றார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்காகப் பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியாவதையொட்டி தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா,சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும்போது,
“1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் மக்களுடைய ஜனநாயக ரீதியான தீர்ப்பு ஒன்றுதான். அது – இலங்கையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே.
தங்களை ஒரு தனி தேசமாக கணிக்கின்ற – வரித்துக் கொண்ட – தமிழ் மக்களுடைய ஜனநாயகத் தீர்ப்பாக – முடிவாக – அது இருக்கின்றது.
கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்களுடைய கட்சியாக வியாபித்து இருக்கின்ற எங்களுடைய தமிழரசுக் கட்சியின் சார்பில், இப்போது புதிதாக வந்திருக்கின்ற இந்த அரசுக்கும் எமது கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு நாளிலே ஒரு செய்தியை நாங்கள் சொல்லுகின்றோம்.
சர்வதேசத்தினால், சர்வதேச சட்டங்களினால், ஒரு மக்கள் கூட்டமாக கருதப்படுகின்ற எங்கள் இனத்தினுடைய ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை இந்த புதிய அரசுக்கும் நாங்கள் வலியுறுத்திக் கூறுகின்றோம்.
நீங்கள் ஆட்சிக்கு வருகின்ற போது புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள். அதனை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
1956 முதல் எந்தவித சலமும் இல்லாமல், சமஷ்டி ஆட்சி முறை இந்த இலங்கை தீவில் உருவாக்கப்பட வேண்டும் என்று வடக்கு, கிழக்கு தமிழர்கள் தொடர்ந்து ஜனநாயக முறையில் வலியுறுத்தி வரும் கோரிக்கை அந்த அரசமைப்பு உருவாக்கத்தின்போது உள்வாங்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தமிழரசுக் கட்சியின் அங்குரார்ப்பண நாளில் அரசுக்குக் கூறி வைக்க விரும்புகின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயம் இந்தியப் பிரதமரோடு சேர்ந்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக மூன்று விடயங்களைத் தெரிவித்திருக்கிறார்.
முதலாவது – இலங்கையின் அரசமைப்பை முற்றுமுழுத்தாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது. காலாகாலமாக இந்திய அறிக்கைகளில் பதிமூன்றாவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயம் சொல்லப்படுவது வழமை. 13 ஆவது திருத்தம் இலங்கை அரசமைப்பின் ஒரு பின்னிணைப்பு அல்ல, அது அரசமைப்பின் ஒரு பகுதி என்பதை நாங்கள் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டி வருகின்றோம். ஆகையினால் இலங்கையின் அரசமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் குறிப்பிடுவது 13ஆவது திருத்தம் மற்றும் தமிழ்மொழியின் நடைமுறையாக்கம் தொடர்பான 16 ஆவது திருத்தம் ஆகியவற்றையும் சேர்த்துதான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதில் குறிப்பிட்ட படி காணி, பொலிஸ் அதிகாரங்கள் – அவை முழுமையாக வழங்கப்பட்டிருக்கின்றனவோ இல்லையோ – குறிப்பிட்டபடி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தியப் பிரதமரின் கருத்து.
இரண்டாவதாக அவர் கூறியிருப்பது இலங்கை தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது.
தமிழ் மக்களுடைய அபிலாசை என்பது 1956 முதல் தெட்டத் தெளிவாக தமிழ் மக்கள் முன்னிறுத்தி வருகின்ற சமஷ்டி முறைத் தீர்வுதான், அதற்கு குறைவானது எதுவும் அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகவே, தமிழ் மக்களின் அந்த அரசியல் அபிலாஷை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பாரதப் பிரதமரின் கோரிக்கை.
மூன்றாவது விடயம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஆகவே, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் இவற்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கின்றமையை நாங்கள் வரவேற்கின்றோம்.
இதற்காகப் பாரதப் பிரதமருக்கு நன்றி கூறும் அதேவேளை, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இவ்விடயங்களில் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய கடப்பாடுகளையும் நாம் நினைவு கூற விரும்புகின்றோம்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு இருக்கின்ற அதேவேளை அவற்றை நிறைவேற்ற பண்ணுகின்ற எல்லாவிதமான இராஜதந்திர நகர்வுகளையும் இந்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.” – என்றார்.