ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டை செலுத்த மீண்டும் தவணை கோரும் மைத்திரிபால!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, செலுத்த வேண்டிய, 100 மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டுத் தொகையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை உரிய கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனு ஒன்றின் மூலம், உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டை செலுத்த மீண்டும் தவணை கோரும் மைத்திரிபால!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, செலுத்த வேண்டிய, 100 மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டுத் தொகையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை உரிய கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனு ஒன்றின் மூலம், உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

மீதமுள்ள 85 மில்லியன் ரூபாயை 8.5 மில்லியன் ரூபாயை வீதம், 10 சம தவணைகளில் செலுத்த அனுமதி வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் வருடாந்தம், இந்த இழப்பீட்டுத் தொகையை செலுத்தவுள்ளதாக குறித்த மனுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஓய்வூதியமாக, மாதாந்தம் தமக்கு, 97 ஆயிரத்து 500 ரூபாயும், நாடாளுமன்ற உறுப்பினருக்கான கொடுப்பனவாக, ஏனைய கொடுப்பனவுகள் தவிர, 54 ஆயிரத்து 285 ரூபாயும், கிடைப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, இழப்பீடு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயர்நீதிமன்றில் குறித்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

போதிய புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும், தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர், அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் தமது தீர்ப்பில், மைத்ரிபால சிறிசேனவினால், மனுதாரர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டது.

அத்துடன், பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர், தலா 75 மில்லியன் ரூபாயும், ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாயும், சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாயும், தங்களது தனிப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடாக செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் பாதுகாப்புச் செயலளர் ஹேமசிறி பெர்னாண்டோ, ஒரு மில்லியன் ரூபாயும், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர 17 இலட்சத்து 25 ஆயிரத்து 588 ரூபாயும், செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் 50 இலட்சம் ரூபாயும், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன 41 இலட்சம் ரூபாயும், செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, காலக்கெடுவுக்கு முன்னர் பணத்தை வைப்பிலிட தவறினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமென சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.