பாதாள உலகத்திற்கு புதிய மறுமலர்ச்சி யுகம் - சஜித் பிரேமதாஸ

இன்று நாட்டை ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் வரலாறு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர். நாட்டை அழித்தது முதலாளித்துவ வர்க்கமே என்று இவர்கள் தொடர்ச்சியாக கூறி வந்தனர். ஆனால் முதலாளித்துவ வர்க்கம் என்று சொல்லப்பட்ட அரசாங்கங்கள் மக்களுக்கு நல்லதையே செய்துள்ளன. அவ்வாறு செய்த நல்லனவற்றுக் கூட இவர்கள் குறை கூறி திரிகின்றனர்.
தெளிவான அதிகாரம் கிடைத்தும் இன்று இவர்களால் எதையுமே செய்ய முடியாது புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முதலாளித்துவ வர்க்க அரசு நியாயமான விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்கும் போது, உழைக்கும் வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திசைகாட்டி அரசு 100 ரூபாய்க்கு மேலான விலையில் இன்று அரிசியை விற்பனை செய்து வருகிறது.
நாட்டை அழித்ததாகச் சொல்லப்படும் அரசாங்கங்கள் நியாயமான விலையில் தேங்காயை விற்கும் போது, உழைக்கும் வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லப்படும் திசைகாட்டி இன்று 100 ரூபாய்க்கும் அதிகமான விலையில் தேங்காயை விற்பனை செய்து வருகிறது. முதலாளித்துவ வர்க்க அரசாங்கங்கள் அவ்வப்போது உரிய நேரத்துக்கு உர மானியங்களை வழங்கி வந்தன. ஆனால் அறுவடை முடிந்ததுமே இந்த திசைகாட்டி அரசாங்கம் உர மானியத்தை வழங்கி வருகிறது.
இந்த அரசாங்கத்தால் உரிய நேரத்துக்கு உரத்தைக் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரிகள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு ஆதரவளித்தனர்.
ஆனால் இன்று வேலையில்லாப் பட்டதாரிகள் கூட கவனிப்பார் அற்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளுக்கு கண்ணீர் புகை பிரயோகம், தடியடி மற்றும் அரச பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. பட்டதாரிகள் போராட்ட இடத்திலிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் எழுப்பி ஆட்சிக்கு வந்த திசைகாட்டி, முதலாளித்துவத்தை பிரதியெடுத்து, சாதாரண மக்களை மறந்து, பாட்டாளி வர்க்கத்தை மறந்து செயல்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (23) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் முதல் இரண்டு மாதங்களிலயே மக்களை ஏமாற்றிவிட்டது. 6 மாத இறுதியில் இவர்களின் பொய்யையும் ஏமாற்றுதலையும் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு ஒரு வருடம் கடக்கும் போது மக்களுக்கு இதைவிடவும் உண்மை நிலை புரிய வரும். உண்மை எவ்வளவு விரும்பத்தகாததாக இருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி உண்மைக்காக, மக்களுக்காக, மக்களின் உரிமைக்காக என்றும் முன்நிற்கும். நாட்டு மக்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
???? சாதாரண மக்களுக்கு என்ன நடந்தாலும், பாதாள உலகத்தினருக்கு மறுமலர்ச்சி உதயமாகியுள்ளது.
வேறு வடிவிலான பாதாள உலக நடவடிக்கைகள் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் இடமளித்துள்ளது. பாதாள உலகத்தின் வேர்களை, துப்பாக்கிதாரிகளின் கடத்தல் கலாச்சாரத்தை, கொலைக் கலாசாரத்தை மர்மமான முறையில் முன்னெடுத்துச் செல்லும் கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னனணியின் தேசபக்தி இயக்கம்தான் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது. மக்கள் விடுதலை முன்னனணியினர் தான் துப்பாக்கி அரசியலை, துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்கள்.
இதனை நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டனர். பொது மக்களுக்கான மறுமலர்ச்சி எப்படி போனாலும் பாதாள உலகத்திற்கு புதிய மறுமலர்ச்சி யுகம் திசைகாட்டி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
???? நடுத் தரப்பாதையே எமது கொள்கையாகும்.
தீவிர முதலாளித்துவத்தில் இருந்தும், தீவிர சோசலிசக் கொள்கையில் இருந்தும் விலகி மனிதாபிமான முதலாளித்துவத்தை மையமாகக் கொண்ட நடுத்தர பாதையில் பயணிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். குரோனி முதலாளித்துவ கொள்கைகளை நாம் பின்பற்ற மாட்டோம். மனிதாபிமான முதலாளித்துவத்தின் மூலம் செல்வத்தை உருவாக்கி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் செல்வத்தை பகிர்ந்தளிக்கும் நடைமுறையை ஐக்கிய மக்கள் சக்தி நம்புகிறது. சோசலிச கொள்கைகளை பின்பற்றியும் நடைமுறைப்படுத்தியும் தற்போதைய உலக ஒழுங்கில் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. கம்யூனிஸ நாடுகள் என கூறப்படும் சீனாவும் ரஷ்யாவும் கூட இன்று முதலாளித்துவத்தையே கடைபிடிக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் முந்தைய அரசாங்கம் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப வைப்பு நிதிகளின் மீதே அதிக அழுத்தத்தை கொடுத்தது.
வங்கிக் கட்டமைப்புக்கும், கோடீஸ்வரர்களுக்கும் சலுகைகளை வழங்கி, அவர்களை பாதுகாத்து, உழைக்கும் மக்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியே அதற்கு எதிர்ப்பை தெரிவித்தது. இந்த லும்பன் வர்க்க முதலாளித்துவத்துக்கு எம்மிடம் இடமில்லை. நாம் அதை எதிர்க்கிறோம்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை அரசாங்கத்தின் தலையீட்டினால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சோசலிசம் நம்பினாலும் அது பொய்யாகும். வடகொரியா கியூபா போன்று மாற வேண்டும் என்றால் இந்த கொள்கை சரி, ஆனால் சிங்கப்பூர் போன்ற நாடாக மாற வேண்டும் என்றால் இந்த முறை ஏற்புடையதல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.