நான் அர்ச்சுனாவை தாக்கவில்லை - அவர்தான் வாக்குவாதம்செய்தார் - சுஜித் சஞ்சய்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று (03) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
"அப்படி எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நான் தாக்கியதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அறிக்கை விட்டிருந்தார். நான் அவரைத் தாக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவரால் வாக்குவாதம் இடம்பெற்றது.\
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு வந்த அவர், எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது நானும் அலவத்துவல நாடாளுமன்ற உறுப்பினரும் நாற்காலியின் மறுபுறத்தில் அமர்ந்திருந்தோம்
இதன்போது, கட்சித் தலைவர்கள் அல்லது சபாநாயகருடன் பேசி இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலவத்துவல நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
அதனைக் செவிமடுக்காத அர்ச்சுன, நான் உங்களுடன் பேசுவதற்கு வரவில்லை என்று கூறினார்.
அதற்கு நான், எங்களுக்கு தெரிந்ததைத்தான் கூறுகின்றோம்.
அதனை செய்யாமல் எதிர்க்கட்சித் தலைவரையும், எதிர்க்கட்சி அலுவலகத்தின் ஊழியர்களையும் திட்டுவது நியாயமில்லை என்று சொன்னேன்.
எனினும், இந்த விடயம் உங்களுக்கு தொடர்புபட்டதல்ல எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார" என்று சுஜித் சஞ்சய் பெரேரா குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுஜித் என்ற நபரே தம்மை தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த சம்பவம் ஒன்று பதிவாகி, பின்னர் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எவ்வாறாயினும், கடந்த 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியமை குறிப்பிடத்தக்கது.