தமிழருக்கு பரிந்து பேசும் விமல்!
இனவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிரானவர்கள் என்பதை தமிழ் மக்கள் அவர்களின் வாக்குகளினூடாக நிரூபித்திருக்கிறார்கள். எனவே, இதனைப் புரிந்து செயலாற்ற வேண்டியதும் அமெரிக்கா, இந்தியா, டயஸ்போரா ஆகிய தரப்புகளின் ஒப்பந்தங்களுக்கு அடிபணியாமல் சிங்கள, தமிழ், முஸ்லிம் என சகல மக்களினதும் அபிலாஷைகளை சமமாக நிறைவேற்றுவதற்கான பயணத்தை முன்னெடுப்பதுமே தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்’’ தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துகள் எமது கவனத்தை ஈர்த்துள்ளன.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு சொன்ன கருத்துகள் இவை .
“இம்முறை வெளிப்பட்டுள்ள மக்கள் ஆணையில் பல்வேறு அர்த்தங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. வழக்கத்துக்கு மாறாக வடக்கு மக்களின் வாக்குகள் இனவாதத்துக்கு எதிரானவை மாத்திரமல்ல. அந்த வாக்குகள் பிரிவினைவாதத்துக்கும் எதிரானவை என்று நம்புகிறோம். பிரிவினைவாதத்துக்கு பக்கச்சார்பாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவுசெய்வதற்குப் பதிலாக மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியைத் தெரிவுசெய்ததனூடாகவும் அந்தப் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளினூடாகவும் தாம் இனவாதத்தைப் போன்று பிரிவினைவாதத்துக்கும் எதிரானவர்கள் என்பதை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே, இந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயலாற்றுவது மிக அவசியமாகும்.
கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்புகள் மீண்டும் இனவாத, பிரிவினைவாத, சமயவாத கோரிக்கைகளை முன்வைக்க முற்பட்டு வருகின்றன. எனவே, அவற்றை பிரதானமாக கொள்வதற்குப் பதிலாக ஒன்றிணைந்த இராச்சியத்துக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் என சகல மக்களினதும் அபிலாஷைகளை சமமாக நிறைவேற்றுவதற்கான பயணத்தை முன்னெடுப்பதே இந்த மக்கள் ஆணையின் பொருளாகும்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்தத் தேர்தலில் பிரபுக்களின் ஆட்சி நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரபுக்கள் இல்லாத முகாமொன்றுக்கு நாட்டின் ஆட்சிப்பலம் சென்றுள்ளது. எனவே, அதனை நாங்கள் முன்னேற்றமாகவே பார்க்கிறோம். இந்தியா, அமெரிக்காவின் ஒப்பந்தங்களை நிறைவேற்றாமலும் டயஸ்போராவின் ஒப்பந்தங்களை நிறைவேற்றாமலும் சிங்கள, தமிழ் என சகல மக்களினதும் அபிலாஷைகளையும் நீதியான முறையில் நிறைவேற்றுவதற்கான பாதையில் செல்வார்களாக இருந்தால் அதனை நாங்கள் சிறந்த கண்ணோட்டத்தில் பார்க்கத் தயாராக இருக்கிறோம். அவ்வாறில்லையென்றால் அதற்கெதிராக மக்களை அணிதிரட்டவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை, அதனூடாக எதிர்பார்க்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற அந்த ஆட்சியாளர்களினால் முடியாமல் போனமையால் ஏற்பட்ட நம்பிக்கையின்மை, பாரம்பரிய கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுடன் பொதுமக்கள் தமது மாற்றுத் தெரிவாகவே தேசிய மக்கள் சக்தியைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். பாரிய எதிர்பார்ப்புடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது”என்று தெரிவித்துள்ளார் வீரவன்ச.
சுயநிர்ணய உரிமைக்கான சுமார் மூன்று தசாப்த கால ஈழத் தமிழர்களின் போராட்டம், பொதுத்தேர்தலொன்றின் பின்னர் பிரிவினைப் போராட்டமாக சித்திரிக்கப்பட்டிருக்கிற விசித்திரத்தை என்னவென்று விபரிப்பதெனப் புரியவில்லை.
ஜனாதிபதித் தேர்தலுடன் எழுந்த அநுர அலையால் அள்ளுண்ட தமிழர்கள், அதற்கடுத்ததாக வந்த பொதுத் தேர்தலிலும் மாற்றம் ஒன்றுக்காக மகத்தான ஆதரவை, எந்தவித எதிர்வினைகளையும் பற்றி யோசிக்காமல் வாரி வழங்கிவிட்டனர். இதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் முக்கியமான காரணகர்த்தாக்கள் என்பதை மறந்துவிட முடியாது. ஒற்றுமையாக செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளை, உரிமைக்கோரிக்கைகளைத் தீர்க்கமுடியாமல் பாராளுமன்றக் கதிரை ஆசைகளுக்காக இரண்டாய், மூன்றாய், நான்காய் பிரிந்துநின்ற தமிழ் அரசியல்வாதிகளும் சரியாக வழிநடத்தலின்றி செயற்பட்ட மக்களின் இன்றைய நிலைமைக்கு காரணகர்த்தாக்கள் என்பதை சொல்லாமலிருந்துவிட முடியாது.
சமூக ஊடகங்களையும் சொல்வழிக்கதைகளையும் கேட்டு முறுக்கேறியிருந்த தமிழர்கள் உணர்ச்சிகரமான தீர்மானங்களையே கடந்த தேர்தலில் எடுத்திருந்தனர். அதனால்தான் சுயேச்சையாகப் போட்டியிட்ட மருத்துவர் ஒருவருக்கும் பாராளுமன்றம் புக வாய்ப்புக் கிட்டியது. சிங்கள தேசியக் கட்சிகளின் சார்பாகப் போட்டியிட்டவர்கள் கூட பெரு வெற்றியீட்டினர்.
அப்படியாக வழங்கப்பட்ட பெரு வெற்றியின் தாக்கமே இப்போது விமல் வீரவன்சவின் பாஷையில் புதிய அர்த்தத்தை வழங்கியிருக்கிறது. விமல் வீரவன்சவின் இந்தக் கருத்தை சாதாரண ஓர் இனவாதக் கருத்தாக எடுத்துவிட்டு கடந்துசெல்ல முடியாது. இனிவரும் நாட்களில் சர்வதேச சமூகத்துக்கு சிங்கள அரசியல்வாதிகள், ஆட்சியாளர் தரப்பு காட்டப்போகும் புதிய வரைவிலக்கணத்தையே சுட்டி நிற்கிறார் விமல்.
போரின் காரணமாக உயிர்கள், உடைமைகளை இழந்த தமிழ்ச் சமூகம் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்குமென எதிர்பார்த்துக் காத்திருந்த சந்தர்ப்பத்தில் பிரிவினைவாதத்தை ஒழிக்கவே யுத்தம் நடத்தப்பட்டதாக அரிதாரம் பூசும் படலம் ஆரம்பிக்கப்போகிறது. தமிழர்களுக்கு இதன் பாதிப்பு உணர சிலகாலம் செல்லும். அல்லது உணரமுடியாமல் போய்விடலாம். ஆனால், காலாகாலமாக தமிழர் கோரிவந்த சுயநிர்ணய உரிமையும் அபிலாஷைகளை நிறைவேற்றக் கோரும் கோரிக்கையும் வலுவிழந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. விமலின் இந்தப் பிரிவினைப் பேச்சுக்கு பதில் கொடுக்கக்கூடிய நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் இல்லை என்பது மற்றுமொரு பெருந்துயர்.