ரூ.1700 சம்பள விவகாரம் : பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

ரூ.1700 சம்பள விவகாரம் : பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்ட வர்த்தமானி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தியபெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூ.1700 வாக அதிகரிக்குமாறு தொழில் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறும், மனு மீதான விசாரணை முடிவடையும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

எனினும், குறித்த வர்த்தமானி அமுல்படுத்தப்படுவதைத் தடுத்து, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்காதிருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

இதனை சவாலுக்குட்படுத்தி பெருந்தோட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. 

பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தன மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போ​து, எதிர்வரும் 24 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.