இலங்கையில் 20.3 வீதமானோருக்கு குடிநீர் வசதி இல்லை!
இலங்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்நாட்டில் 20.3 வீதமான குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லையெனத் தெரியவந்துள்ளது.
நாட்டிலுள்ள உள்நாட்டு சனத்தொகையில் 16.1 வீதமானோருக்கு பாதுகாப்பற்ற கிணறுகளே, முக்கிய குடிநீர் வசதியாக உள்ளதெனக் கூறிப்பிடப்படுகிறது.
மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாள மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற முடியுமெனத் தெரியவந்துள்ளது.
நகர்ப்புற மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினரும் கிராமப்புற மக்களில் நான்கில் ஒரு பகுதியினரும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும், தோட்டபுற மக்களில் 3.1 வீதமானனோர் மட்டுமே பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டிலுள்ள உள்நாட்டு மக்கள் தொகையில் 70 வீதமானவருக்கும் அதிகமானோர் தங்கள் வளாகங்களில் மேம்படுத்தப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கையில் 84.9 வீதமான குடும்ப மக்கள் நீர் மூடிய கழிவறைகளையே பயன்படுத்துவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.