காலநிலை அனர்த்தங்களுக்கு தீர்வுகளை தேடுவதற்காக இலங்கை ஆதரவு!
காலநிலை அனர்த்தங்களுக்கு தீர்வுகளை தேடுவதற்காக பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான முயற்சிகளுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக இலங்கையில் சர்வதேச காலநிலைப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தீர்மானித்திருப்பதாகவும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க வலயங்களின் காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான முக்கியமான பணியை அதனால் ஆற்ற முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய வலயத்தை கார்பன் உமிழ்வு பிராந்தியமாக மாற்றுவதன் ஊடாக நிலையான அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு தனியார் துறையை ஊக்குவிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பிராந்தியம் முழுவதிலும் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் செயற்பாடுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
வெப்ப வலயத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகள் குறித்து அறிக்கையிடுவதற்கு இலங்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய நாடுகள் என்பவற்றை உள்ளிடக்கிய வகையில் நிபுணத்துவ குழுவொன்று நிறுவப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் காரணமாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் வரை குறையக்கூடும் என்பதனால் பொருளாதார பாதிப்புக்கள் குறித்து கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரத் தேவையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.