கல்வி கற்பித்த தமிழ் ஆசிரியரை கௌரவித்த ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பகாலத்தில் கல்வி கற்பித்த ஆசிரியர் கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த திரு.சிவலிங்கம் அவர்களை சந்தித்ததுடன் அவரை ஜனாதிபதி கௌரவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024 - ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்கான பொதுக் கூட்டம் நேற்று (24) கல்லடி உப்போடை சிவாநந்தா தேசிய பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போதே, ஜனாதிபதி தனது முன்னாள் ஆசிரியரை சந்தித்தார்.
குறித்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, "மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் நாட்டை முன்னேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சியை இடைநிறுத்துவது எதிர்க்கட்சிகளின் இலக்கு என குற்றம்சுமத்தியுள்ளார்.
இருந்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களாக மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
2025/2026 க்குள், அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளை அரசாங்கம் உருவாக்கும் என்று ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
இந்த இலக்கை நோக்கிச் செயற்படுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்
மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாது என்று வலியுறுத்திய அவர், அவர்களின் நலனுக்காக தேவையான எந்த முடிவுகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தனது உரையின் போது, ஜனாதிபதி தனது ஆசிரியரின் பாடத்தை நினைவு கூர்ந்தார்.
ஏதென்ஸின் பேரரசர்களைப் பற்றி றோயல் கல்லூரியில் தான் கற்ற பாடம் தனது வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"எந்த ஒரு கோழைத்தனமான செயலாலும் எங்கள் தாய் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த மாட்டோம் - எங்களின் அணிகளில் இருக்கும் எந்தவொரு துன்புறும் தோழர்களையும் கைவிட மாட்டோம்" என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டை வழிநடத்தி பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான சவாலை மற்றவர்கள் பொறுப்பேற்க விரும்பாத போது அதனை எவ்வாறு சமாளித்தார் என்பதையும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்தார்.