புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18.12.2022) காலை ஆரம்பமாகவுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18.12.2022) காலை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, 334,698 பரீட்சார்த்திகளின் பங்குபற்றுதலுடன் 2894 பரீட்சை நிலையங்களில் நாளைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முறையில் மாற்றம்

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும். கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது.

பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும்.

பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்களிடம் கோரிக்கை

இதேவேளை கடந்த வருடங்களைப் போன்று இம்முறை மாணவர்கள் எவருக்கும் பரீட்சை அனுமதிச் சீட்டுகள் கிடைக்காதமை விசேட அம்சமாகும்.

மேலும் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களிடமும் கையொப்பம் மாத்திரம் பெற்றுக்கொள்ள பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

எனவே எந்தவொரு அழுத்தமும் இன்றி சுதந்திரமாக பரீட்சையை எதிர்கொள்ள ஒவ்வொரு பிள்ளையும் அனுமதிக்கப்பட வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.