சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி - முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கைது!
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேரத் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நீதிமன்றத்துக்கான செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த 26 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, சர்ச்சைக்குரிய தடுப்பூசியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜானக பெர்னாண்டோ ஆகியோர் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவ விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட நால்வர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.