கோறளைப்பற்றில் காணியற்ற 270 குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்கப்பட்டது!
கடந்த பல வருடங்களாக உரிய காணியற்ற நிலையில் வாழ்ந்து வந்த 270 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (12) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கடந்த பல வருடங்களாக உரிய காணியற்ற நிலையில் வாழ்ந்து வந்த 270 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (12) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெற்ற இரு வேறு காணி வழங்கும் நிகழ்வுகளில் சுற்றாடல்துறை அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு காணியற்ற குடும்பங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இதன்படி கோறளைப்பற்று மத்தியில் 120 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரங்களும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 150 குடும்பங்களுக்குமான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பதற்கு காணி இல்லாத நிலையில் 2228 பேர் காணி கோரி விண்ணப்பித்திருந்ததாகவும் ஆனால், இந்தப் பிரதேச செயலகப் பிரிவில் காணி இல்லாத காரணத்தினால் 398 பேருக்கே காணிகள் வழங்க முடிந்திருந்திருப்பதாகவும் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைபபுக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்களுக்கு குடியிருக்க காணியில்லாத நிலைமை ஒரு மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்திருப்பதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பாரபட்சமான நிர்வாக முறைமையினால் இந்த அவல நிலை தோன்றியிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.
எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் விரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே தான் இந்தப் பிரச்சினையை அடக்கி வாசிக்காமல் அம்பலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.