மின்சார கட்டணம் குறைக்கப்படும் சாத்தியம்?

இலங்கையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் குறைக்கப்படும் சாத்தியம்?

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் மின் கட்டணத்தில் திருத்தம் ஏற்படுத்தப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, இந்த ஆண்டில், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள மின்சார சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து நுகர்வோருக்கு உயர்தர சேவையை வழங்க புதிய சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அதன்படி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் 70சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான இலக்கை நிர்ணயித்து மின்னுற்பத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.  

தற்போது, மின்சார சபைக்கு புதிய பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பணித்திறனுக்கு ஏற்ப, பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.