கைதான 4 பல்கலை மாணவர்களும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விடுதலை!

கிளிநொச்சி - இரணைமடு பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியின் போது கைதான பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இரணைமடு சந்தியிலிருந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதன்போது, குறித்த பகுதியில் காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்பதற்கு முற்பட்ட வேளையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

அதன்போது, எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த மாணவர்களை விடுவிக்குமாறு அங்கிருந்த பொதுமக்களும், சக மாணவர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய, குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும், சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி காந்திபூங்கா வரையில் சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், நீதிமன்ற உத்தரவு காரணமாக புனித செபஸ்தியார் தேவாலயத்துடன் குறித்த பேரணி மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தேவாலயத்துக்கு அருகிலிருந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவிருந்த நிலையில் குறித்த பகுதியில் கலகமடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், வீதித்தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இதில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், காணி அபகரிப்புகளுக்கு எதிராகவும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைப் பெற்றுத் தரக்கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேநேரம், இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் முன்பாக இருந்து ஆரம்பமான சுதந்திர நடைபவணி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.

இதன்போது தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு நடைபயணமாகவும், உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளிலும் பயணித்திருந்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.