மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் 7 பேர் கைது!

மட்டக்களப்பு - வவுணதீவு காவல் நிலையத்துக்கு முன்பாக மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் 7 பேர் கைது!

தாண்டியடி பகுதியில் நினைவேந்தலை நடத்துவதற்காக மட்டக்களப்பு நகரில் இருந்து வாகனமொன்றில் அலங்கார கொடிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார். 

 இந்த நிலையில், வவுணதீவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை சந்திக்கச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் குறித்த காவல்நிலையத்துக்கு முன்பாக நினைவேந்தல் சுடரை ஏற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள் உள்ளிட்ட பொருட்களை மீள எடுத்த சென்ற நான்கு பேர் நேற்று வாழைச்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் பயணித்த வாகனத்தை வீதியில் வைத்து மறித்து சோதனை செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, நேற்று நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.