தற்கொலை செய்து கொண்ட போதகருக்கும், போலி பிக்குவுக்கும் இடையில் ரகசிய உரையாடல்!

தற்கொலை செய்து கொண்ட போதகருக்கும், போலி பிக்குவுக்கும் இடையில் ரகசிய உரையாடல்!

'அவலோகிதேஸ்வர' என தம்மை அடையாளப்படுத்தும் போலி பிக்குவுக்கும் அண்மையில் தமது உயிரை மாய்த்துக் கொண்ட ருவன் பிரசன்ன குணரத்ன என்ற போதகருக்கும் இடையில் ரகசிய உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஹகுலுகல்ல சிறி ஜினாநந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

'அவலோகிதேஸ்வர' என்ற குறித்த நபரை விமான நிலையத்தில் மக்கள் வழிபடும் காணொளிகள் மற்றும் விகாரையொன்றில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பேசு பொருளாக மாறியுள்ளது.

குறித்த நபர் புத்தரின் போதனைகளுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதாக எஹகுலுகல்ல சிறி ஜினாநந்த தேரர் உள்ளிட்ட சிலர் இன்று காவல்துறை தலைமையகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இரண்டு முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரயே விசுவ புத்தி தேரர் என்பவரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபரான தேரரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில், மதங்கள் தொடர்பான போலியான பரப்புரைகளுக்கு சிலர் அடிமையாகும் போக்கு காணப்படுவதால், இவ்வாறான சித்தாந்தங்களுக்கு ஏமாற வேண்டாம் என சர்வமதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.