நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம் கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஏற்கனவே மூவாயிரம் குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக நீரின் பயன்பாடு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது 6 நீர் வழங்கல் அமைப்புகளில் இருந்து மாத்திரமே நீர் விநியோகம் இடம்பெறுவதாகவும் இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.