கனடாவில் உயிரிழந்தவர்களின் உறவுகளை இறுதிச் சடங்கிற்காக அழைப்பது குறித்து ஆலோசனை!
கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்து வருவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான ஆலோசனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விசாரணை முடிந்த பின்னர், உயிரிழந்த 6 பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் தொடர்பில் இதுவரை பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு சென்ற சந்தேகநபர் ஒரு மாதத்தின் பின்னர் தமது குடும்பத்துடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கனடா, ஒட்டாவா, பஹவன் பகுதியில் வசித்து வந்த இலங்கையர்கள் குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட ஆறு பேர் கடந்த 6 ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் பலியான பிள்ளைகளின் தந்தையான தனுஷ்க மதுரங்க பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையாளி என கருதப்படும் பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயது மாணவனுக்கும் சம்பவத்தில் உயிரிழந்த 40 வயதுடைய காமினி அமரகோனுக்கும் தனுஷ்க மதுரங்க தமது வீட்டில் அறைகளை வாடகைக்கு வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தனுஷ்க மதுரங்கவும் வாடகை அடிப்படையிலேயே குறித்த வீட்டைப் பெற்றுள்ளார்.
எவ்வாறாயினும், அந்த வீட்டில் தமது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு நபர்கள் இருப்பதாக அவர் வீட்டு உரிமையாளரிடம் சட்டப்பூர்வமாக அறிவித்திருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்த தனுஷ்க விக்ரமசிங்கவின் குடும்பத்துக்காக உதவ கனேடிய பௌத்த பேரவையும் ஒரு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுவரை 40,000 அமெரிக்க டொலர்கள் அந்த திட்டத்துக்காக கிடைத்துள்ளதாக கனேடிய பௌத்த பேரவை குறிப்பிட்டுள்ளது.