வரவு செலவு திட்ட யோசனையில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் - குழுநிலை விவாதம்!

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் இன்று (05) நாடாளுமன்றில்  இடம்பெற்றது.

வரவு செலவு திட்ட யோசனையில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் - குழுநிலை விவாதம்!

இதன்போது தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைத்தனர்.

பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.

உரிய திறமைகள் உள்ள போதிலும் அந்த திறமைக்கு ஏற்ப கல்வியை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சவால்களை எதிர்நோக்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 2,500 உதவி ஆசியர்களை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த உதவி ஆசிரியர்களுக்கு ஒரு தொகை கட்டணம் செலுத்தப்படும் எனவும் 3 வருட பயிற்சியின் பின்னர் அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அதேநேரம், குறித்த உதவி ஆசிரியர்கள் பெருந்தோட்ட மக்கள் வசிக்கும் 6 மாவட்டங்களில் உள்ள 864 பாடசாலைகளில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.  

இதனை தொடர்ந்து கருத்துரைத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மாத்திரமின்றி கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார்.

இந்த விடயத்துக்கு கல்வி அமைச்சர் உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மலையக பல்கலைக்கழகம் குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அதற்கு முன்பாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தேவையை விடவும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாகவும் சில பாடசாலைகளில் 50 சதவீதமான ஆசிரியர்களே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்கள் வசிக்கும் சகல பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளுக்கும் தேவைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த பிரச்சினை சிங்கள மொழிமூல பாடசாலைகளிலும் நிலவுகிறது எனவும்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முன்வைத்த கருத்துக்கு பதிலளித்த, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார், பெருந்தோட்ட மக்கள் வசிக்கும் சகல பாடசாலைகளுக்கும் ஒரே மாதிரியான சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

குறிப்பாக வேறு பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களுக்கு,  வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கி, கற்றல் செயற்பாடுகள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
அதேநேரம், 2017ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார் கருத்து வெளியிட்டார்.

வெளி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயில்வதற்கு தடை விதிக்கும் வகையில் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது குறிக்கிட்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தற்போது விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கும் வகையிலான பாடசாலைகளை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்துவோம் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கருத்துரைத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், குறித்த தீர்மானத்துக்கு அந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தங்களது தரப்பு எதிர்ப்பை வெளியிட்டதாக தெரிவித்தார்.

அத்துடன் மத்திய மாகாணத்தில் நியமனம் வழங்கப்படாமல் உள்ள உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், 2016ஆம் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானும் இருந்ததாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அப்போது குறித்த தீர்மானத்தை தங்களது தரப்பு எதிர்த்திருந்ததாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் ஊடாக அந்த மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.