மின்சார உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தம் - காரணம் வெளியானது!
165 மெகாவாட் திறன் கொண்ட நப்தா எரிபொருளில் இயங்கும் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையம், அதன் எரிவாயு விசையாழி மற்றும் நீராவி விசையாழி ஆகியவற்றின் திட்டமிடப்பட்ட பராமரிப்புக்காக நேற்று (17) முதல் மூடப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் எதிர்வரும் 6 வாரங்களுக்கு நடத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் உள்ள 2வது மின் உற்பத்தி அலகு அதன் உயர் அழுத்த வெப்பமாக்கி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பழுதுபார்க்கும் காலப்பகுதியில் நீர் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவிற்கு உற்பத்தி செய்யப்படுவதால் மின்சார விநியோகம் பாதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் 3 வது மின் பிறப்பாக்கி அலகும் செயல்படும் தருவாயில் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.